பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு ஒத்துழைப்பு தர கனடா சம்மதம்| Dinamalar

ஒட்டாவா:பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை தொடர்பாக இந்தியா எடுக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பாடகர் சித்து மூசேவாலா சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த கோல்டி பிரார் எனும் சத்திந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில், பஞ்சாப் அரசின் கோரிக்கையை ஏற்று, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, அனைத்து நாடுகளுக்கும் ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
இதனால் கோல்டி பிரார் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கனடா துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:இந்தியா – கனடா இடையே, கிரிமினல் நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. அதனால் இந்திய எடுக்கும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு கனடா ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில், பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடு அமைக்க கோரும் அமைப்பிற்கு கனடா அரசு ஆதரவளித்து வருகிறது. இதனால் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த கோல்டி பிராரை இந்தியாவுக்கு நாடு கடத்த, கனடா முழு மனதுடன் ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வங்கிக் கடன் மோசடியில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சி முதல் கோல்டி பிரார் வரை, ஆறு நபர்களை பிடிக்க, இன்டர்போல் அமைப்பு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதலில் சுட்டவர் கைது
பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலாவை மொத்தம் எட்டு பேர் சுட்டுக் கொன்றதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவரை முதலில் சுட்டுக் கொன்ற பஞ்சாபைச் சேர்ந்த ஹர்கமல் ராணு என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.