ராமஜெயம் கொலை வழக்கு: விசாரிக்கப்பட்ட டெல்டா ரெளடிகள்; சேலத்தில் என்ன தொடர்பு..?!

தமிழக காவல்துறை முதல் சிபிஐ வரை சவாலாக அமைந்த வழக்குகளில் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கும் ஒன்று. பத்தாண்டுகளாகியும் ராமஜெயம் கொலையில் குற்றவாளிகள் யாரென்று கண்டுப்பிடிக்க முடியாத சூழ்நிலையே இருந்து வருகிறது.

ராமஜெயம் மீது அடுத்தடுத்து கட்டப்பஞ்சாயத்து, நில மோசடி என புகார்கள் குவிய ஆரம்பிக்க, 2012 மார்ச் 29 ஆம் தேதி காலை தில்லைநகரில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்கிங் சென்றபோது கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இதுகுறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் குற்றவாளிகளை அவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. பின்னர் ராமஜெயம் கொலையை சிபிசிஐடி விசாரிக்க ஆரம்பித்தது. இதற்காக டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரெளடிகளை பட்டியலிட்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட முறை இலங்கையில் நடக்கும் கொலையோடு ஒத்துப்போவதும், ஒரு கட்டத்தில் இலங்கையை சேர்ந்த கூலிப்படைகள் கொலை செய்துவிட்டு போயிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்து வந்தனர்.

மேலும் ராமஜெயம் கொலை போன்று தமிழகத்தில் வேறு கொலைகள் எங்கும் நிகழ்ந்துள்ளதா என்று விசாரித்தபோது, சேலத்தில் இதே போன்று கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

சேலத்தில் 2005 ஆம் ஆண்டு அம்மாபேட்டை காவல்நிலைய எல்லையில், சக்தி கைலாஸ் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ஸ்ரீலாவதி ஏரியில் 50 வயதுடைய நபரின் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் இறந்து கிடந்த நபரின் தலையில் பலத்த காயமும் கைகள் முன் பக்கம் எக்ஸ் போன்று, இரும்பு கம்பியால் கட்டியும், பிளாஸ்டர் சுத்தப்பட்டும், கால்கள் மடக்கப்பட்டு கம்பி மற்றும் பிளாஸ்டரால் சுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

ராமஜெயம்

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி விசாரித்தபோது, ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்றும் சேலத்தில் வாட்ச்மேனாக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. அவரது மனைவிக்கும் தேங்காய் கடை ராமசாமி என்பவருக்கும் பழக்கம் இருந்தது ராஜேந்திரனுக்கு தெரியவர, அவரின் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவரின் மனைவி ராமசாமி மூலம் திருவாரூரிலிருந்து கூலிப்படைச் சேர்ந்த ரமேஷ், சுரேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வந்து சேலத்தில் தங்கியிருந்த ரெளடி சிலோன் குமார் ஆகியோரை வைத்து ராஜேந்திரனை கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய சுரேஷ், ரமேஷ் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரியவந்து, அப்போதைய சி.பி.சி.ஐ.டியின் , டி.ஐ.ஜி- யாக இருந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட சுரேஷை விசாரிக்க தனிப்படை அமைத்தார். அதில் சுரேஷை விசாரித்தபோது, ராமஜெயம் கொலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது, அத நாங்க பண்ணல, ஆனா கொலை செய்யப்பட்டிருக்கும் முறை, எங்களோட சிறையிலிருந்து தொழில் கத்துக்கிட்டவனாக தான் இருக்க முடியும் என்று கூறினாராம். அதன்பின் சி.பி.சி.ஐ.டி., கிடைத்த தகவலை வைத்து அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. சுரேஷ், ரமேஷ் சிறையில் இருந்தபோது கூட இருந்த ரெளடிகள், ராமஜெயம் கொலையின்போது இவர்கள் இரண்டு பேரும் சிறையில் இருந்தார்களா என்பது குறித்து எதுவும் விசாரிக்கவில்லை என்கிறார்கள் இந்த வழக்கு குறித்து விவரம் அறிந்தவர்கள்.

ராமஜெயம் கொலை வழக்கு

மேலும் ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு 2 மாதம் முன் திருவாரூர் கொரடாச்சேரியை சேர்ந்த ஒரு நபரை பண பிரச்னையில் தனது அலுவலகத்தில் ராமஜெயம் தாக்கியதும் சி.பி.சி.ஐ.டி., போலீஸாருக்கு தெரியவந்து தேடி வந்தனர். அதில் சம்பந்தப்பட்ட நபர் சேலத்தில் ஒரு கம்பெனியை நடத்தி வந்திருக்கிறார். அவரை போலீஸார் கண்காணிக்கிறார்கள் என்றதும்அந்த நபர் சேலத்திலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளாராம்.

இதுகுறித்து வழக்கில் தொடர்புடைய சில தனிப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “ராமஜெயம் வழக்குக்கும் சேலத்திற்கும் ரொம்பவே தொடர்பு இருக்கு. மேலும் 2005 இல் சேலத்தில் ராமஜெயம் கொலை போன்று நடந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகிறோம். நிச்சயமாக இதில் மிகப்பெரிய லீடு கிடைக்கும் நம்புகிறோம். மேலும் பொதுமக்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிப்போருக்கு 50 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளோம் இதனால் பல்வேறு தகவல்களும் வந்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

இதனிடையே, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் 2-ம் கட்ட ரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.