சீதை தேடிய ராமன் – பத்மினி ராமச்சந்திரன் #AppExclusive

எங்கள் குடும்பம் – திருமதி பத்மினி ராமச்சந்திரன்

டந்த பதினைந்து வருஷமாக கலை உலகில் பல துறைகளில் நான் பணியாற்றி வந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் அநேகம் பத்திரிகைகள் எனது திரை உலக அனுபவத்தைப் பற்றியும், என் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் எழுதும்படி என்னைக் கேட்டிருக்கின்றன.

ஆனந்த விகடனோ, ஒரு முறை கூட என்னைக் கட்டுரை கேட்டதில்லை.

ஆனால் நான் இல்லற வாழ்க்கையில் ஈடு பட்டவுடன், குடும்பப் பத்திரிகையான ஆனந்த விகடன் ‘எங்கள் குடும்பம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டதும், நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். 

எங்கள் குடும்பம் ஒரு கலைக்குடும்பம், கலை உலக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதல்ல என்பதை நாங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறோம்.

என் தமக்கை லலிதா, கலை உலகில் பேரும் புகழும் பெற்று விட்டு, அமைதியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு விட்டாள். இதோ நானும் கலை உலகில் பணியாற்றி விட்டு, இல்லற உலகில் நுழைந்து விட்டேன்.

தொடர்ந்து என் தங்கை ராகினியும் எங்களைப் பின்பற்றுவாள் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது.

நாங்கள் கேரள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். எங்களுக்குச் சொந்த ஊரே திருவனந்தபுரம்தான். அங்கு கௌரவம் மிகுந்த ஒரு குடும்பத்தில் தான் நாங்கள் பிறந்து வளர்ந்தோம்.

எங்கள் தாயார் சரஸ்வதி அம்மாளும், எங்கள் தந்தையார் தங்கப்பன் பிள்ளை அவர்களும் எந்தவிதமான குறையுமின்றித் தான் எங்களை வளர்த்தனர்.நாங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது எனக்குப் பெருமையைத்தான் அளித்தது. ஆனால் என் கலை ஆர்வத்திற்கு அது ஒரு பெரிய தடையாக இருந்தது.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலை, நாட்டியம் போன்றவற்றில் பங்கு பெறக்கூடாதாம்! அது அவர்கள் கௌரவத்திற்கே இழுக்காம்! அதனால்தான் அரண்மனை நாட்டியக்காரர் திரு கோபிநாத் அவர்கள் ஆரம்பித்த நிருத்ய கலாசாலை ஒன்றில் சேர விரும்பிய எனக்கும்.

என் தங்கைக்கும் பல எதிர்ப்புகள் கிளம்பின. இருந்தாலும் என் பெரியம்மா திருமதி பி. கே. பிள்ளை அவர்களின் முயற்சியினால், எல்லா எதிர்ப்புகளையும் ஓரளவு சமாளித்துக் கொண்டு, அந்தக் கலா சாலையில் நானும் என் அக்கா லலிதாவும் சேர்ந்து விட்டோம். அப்போது எனக்கு ஆறு வயது.

லலிதா என்னை விட இரண்டு வயது மூத்தவள். நாங்கள் அந்தக் கலாசாலையில் சேர்ந்த பிறகு, பல பெரிய மனிதர் வீட்டுக் குழந்தைகளும் சேர்ந்தார்கள். டாக்டர் சி.பி. அவர்களின் பேத்தி, திரு. சிதம்பரம் அவர்களின் பெண் லட்சுமி ஆகியோரும் எங்களுடன் நாட்டியம் கற்றுக் கொண்டார்கள்.

(என்னுடைய நெருங்கிய சிநேகிதியான லட்சுமி இப்போது ஒரு கலெக்டரின் மனைவி.)கலை ஆர்வத்தில் அந்தக் கலாசாலையில் சேர்ந்து விட்டேனே தவிர, அப்போது நான் பட்ட கஷ்டங்கள் இருக்கின்றனவே, இப்போது நினைத்தாலும் பயமாகத்தான் இருக்கிறது!

Actress Padmini’s family interview

 தினசரி காலை வேளைகளில் டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், பகல் வேளைகளில் பள்ளிக்கூடம், மாலையில் வீணை கிளாஸ். இரவிலாவது ஒய்வு உண்டா? கிடையாது!

ஒவ்வொரு தினமும் நாங்கள் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை, அன்று இரவு எங்கள் பெரியம்மா முன் ஆடிக்காட்ட வேண்டும்! இது தினசரி அலுவல். 

கோபிநாத் அவர்களின் நிருத்ய கலாசாலையில் கதகளிதான் கற்றுக் கொள்ள முடிந்தது. எங்களுக்கோ பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்ளை ஆசை இருந்தது. அதனால் திருவிடைமருதூரிலிருந்து திரு. மகாலிங்கம் பிள்ளை அவர்களை எங்கள் ஊருக்கு வர வழைத்து, அவரிடம் முறைப்படி பரத நாட்டியம் கற்றுக் கொண்டோம். 

எங்கள் மாமா ஒருவர் பம்பாயில் இருந்தார். அங்கு கடற்படையில் சேவை செய்து வந்தார் அவர். நானும் லலிதாவும் அவர் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தோம்.

அப்போதுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை அளித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. பிரபல கலைஞர் திரு உதயசங்கர் அவர்கள், எங்கள். மாமாவைக் காண வந்திருந்தார். நானும் லலிதாவும் அவர் முன்னிலையில் நாட்டியமாடினோம்.

உடனே அவர், “இந்தக் குழந்தைகள் தகுந்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவர்கள் திறமை மிக்கவர்கள். சிறந்த வருங்காலம் இருக்கிறது இவர்களுக்கு”  என்றார்.

அப்படிச் சொல்லியதுடன் நிற்காமல், சொல்லைச் செயல்படுத்தியும் காட்டினார். நாங்கள் முதல் முதலில் திரை உலகில் அடி எடுத்து வைத்ததே, அவருடைய ‘கல்பனா’ வில்தான். ஜெமினி ஸ்டூடியோவில் நடந்த அப்படப்பிடிப்பு, இன்றும் என் நெஞ்சில் பசுமைக் காட்சியாகத் திகழ்கிறது. 

கல்பனாவுக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல படங்கள் வந்தன. எனது திரை உலக வாழ்க்கை துரிதமாகவே முன்னேறியது. என் திரை உலக வாழ்க்கை எல்லோரும் அறிந்தது தானே! சென்னையில் எங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக நடந்து வந்தது. என் அக்கா லலிதாவுக்கும், எனக்கும், தங்கை ராகினிக்கும் நிறைய படங்களில் சந்தர்ப்பம் கிடைத்து வந்தது. 

அப்போதுதான் ஒரு நாள் என தாயார் லலிதாவைப் பார்த்து, “லலிதா, உனக்குக் கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினேக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். அம்மாவின் இந்தத் திடீர்க் கேள்வி எங்களுக்கெல்லாம் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அக்கா என்ன பதில் சொல்லப்போகிறாள், பார்க்கலாம் என்று நானும் ராகினியும் ஆவலுடன் காத்திருந்தோம். ‘இப்போது எதற்கம்மா கலியாணம்?’ என்று தான் ஏதாவது சொல்லப் போகிறாள் லலிதா என்று எதிர்பார்த்த எங்களுக்கு, பெருத்த ஏமாற்றம்தான் ஏற்பட்டது.

மறுவார்த்தை பேசாமல் “சரி அம்மா” என்று ஒப்புக் கொண்டு விட்டாள் லலிதா! எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் எங்கள் தாய்க்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். தனியாக லலிதாவிடம் இது பற்றிப் பேசினால் அவள். “என்ன லலிதா, நான் கேட்டவுடன் அவ்வளவு சுலபமாக ஒப்புக் கொண்டு விட்டாயே, எனக்கே கூட சற்று ஆச்சரியமாகத் தான் இருந்தது” என்றாள். 

அவர்கள் பேசிக் கொண்டதை, நானும் ராகினியும், அவர்களுக்குத் தெரியாமல் அடுத்த அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு லலிதா என்ன பதில் கூறினாள் தெரியுமா? “பப்பிக்கும், ராகிக்கும் முன்னால் இந்தக் கேள்வியை நீ கேட்டுவிட்டாய். நான் உன்னை எதிர்த்து ஏதாவது பேசினால், அது அவர்களுக்கு வழிகாட்டுவதாக அல்லவா ஆகிவிடும்?” என்றாள்.

ஆமாம்! என் அக்கா லலிதா எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டிதான்! அம்மாவிடம் ஒரு வருஷகாலம் காத்திருக்கும்படிக் கேட்டுக் கொண்டாள் லலிதா. என் தாயாரும் அதற்கு ஒப்புக்கொண்டாள். லலிதா படங்களில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டாள்.

வீட்டில் இருந்து கொண்டே, சமையல் வேலையும் கற்றுக் கொண்டாள். பாவம், தினசரி அவள் சமையல் அறையில் பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, சொல்லி முடியாது! நாங்கள் எல்லோரும் அவள் சமையல் கற்றுக் கொள்வதை வேடிக்கை பார்ப்போம். அத்துடன் அவள் செய்யும் சமையல் வகைகளை ருசி பார்ப்பதும் நாங்கள் தான்! வடை என்று எதையோ செய்வாள், அது முறுக்கு போல் இருக்கும்.

இட்லி என்று செய்வாள், அது சிறிய கல் உருண்டை போல் இருக்கும். என்ன செய்வது? அதையெல்லாம் ருசித்துப் பார்ப்பது எங்கள் கடைமையாகி விட்டது கஷ்டமான காரியம்தான்! இப்போது எங்கள் அத்திம்பேர் சிவசங்கரன் அவர்கள் அந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிறார்!

Actress Padmini’s family interview

 “எவ்வளவுதான் பேரும் புகழும் அடைந்தாலும், இல்வாழ்க்கைதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்! அமைதியான குடும்பத்தில் அடையும் நிம்மதியை, ஒரு பெண்ணால் வேறு எதிலும் அடைய முடியாது.

இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அடிக்கடி சொல்வாள் லலிதா.

லலிதாவின் கலியாணத்தின் மூலம் எங்கள் குடும்பத்தில் இன்னொரு நபர் சேர்ந்து கொண்டார். அவர் எங்கள் அத்திம்பேர் வக்கீல் திரு சிவசங்கரன்.

அக்கா வக்கீல் மனைவி, நான் டாக்டர் மனைவி, ராகினி எஞ்சினியர் மனைவி  ஆவாளோ என்னவோ? திரு சிவசங்கரன், சர்தார் பணிக்கர் அவர்களின் சகோதரர் பிள்ளை.

லலிதாவின் கலியாணம், 1957-ம் ஆண்டு சென்னையில்தான் நடைபெற்றது. அந்தக் கலியான நிகழ்ச்சிகளெல்லாம் நினைக்க நினைக்க மகிழ்வூட்டுபவை! என்னைப் போல் கடைசி நாள் வரை ஷூட்டிங்கில் ஈடுபட்டிருக்கவில்லை அவள்! கொடுத்து வைத்தவள்!

நிம்மதியாக ஒரு வருஷம் முன்பே ஓய்வெடுத்துக் கொண்டு விட்டாள். லலிதா இப்போது ஆலப்புழையில் நிம்மதியான குடும்ப வாழ்க்கை நடத்துகிறாள். அவள் குழந்தைகள் லட்சுமியும் பார்வதியும் இருக்கிறார்களே, அப்பப்பா! சதா துரு துரு வென்றிருக்கும் அவர்களைக் கொஞ்சுவதிலே கொள்ளை இன்பம் அடைவேன் நான். 

படவுலகில் நான் பிரபலமாயிருந்த சமயத்தில்தான், என்னையும் என் தாயார் திருமணம் செய்து கொள்ளும்படி சொன்னார். அக்கா லலிதாவைப் போலவே நானும் உடனே “சரி” என்று ஒப்புக் கொண்டு விட்டேன்.

ஆனால் நான் ஒரு நிபந்தனை விதித்தேன். அது என்ன தெரியுமா? என்னைத் திருமணம் செய்து கொள்பவர், சுயமாகச் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என்பது தான்! என் நிபந்தனைப்படியே எனக்கு ஒரு கணவரைத் தேர்ந்தெடுத்து விட்டார் என் தாயார்.

என் அக்கா லலிதாவுக்கு மாப்பிள்ளை தேடித் தந்த என் மாமா திரு மாதவன் நாயர்தான், எனக்கும் கணவரைத் தேர்ந்தெடுத்தார். என் மாமா, திருவனந்தபுரம் பாங்கில் மானேஜராக இருக்கிறார். பெண் பார்க்கும் வைபவம் நடந்தது. ஆச்சரியமாயிருக்கிறதா? உண்மைதான்!

எல்லாம் முறைப்படி நடந்தது. பெரியவர்களாகச் செய்த காரியம் தான் அனைத்தும். அன்று மாலை தான் அவர் என்னைக் காண வருவதாக இருந்தது. காலையிலிருந்தே எனக்கு எதிலும் நிலை கொள்ளவில்லை.

ஏதோ ஒருவித அமைதியின்மை. அதை என்னால் விவரிக்கவே முடியாது!என் அறையில் புகுந்து கொண்டு, என்ன புடவை கட்டிக் கொள்வது என்பது பற்றி யோசிக்கலானேன். பீரோவிலுள்ளன எல்லாப்புடவைகளும் கீழே குவிந்து விட்டன.

எனக்கு எதுவுமே திருப்தியாயில்லை. தலையைப் பின்னிக் கொள்வதில் ஒரு குழப்பம். ஒற்றைப் பின்னால் போட்டுக் கொள்வதா, இரட்டை ஜடையா, கொண்டையா?அன்றைய மாலை நிகழ்ச்சியைப் பற்றி ராகினிக்கு ஒன்றும் தெரியாது. அவள் வீட்டுக்குச் சின்ன பெண் ஆகையால் இதுபற்றியெல்லாம் அவளிடம் யாரும் பேசமாட்டார்கள்.

(இனி அப்படி முடியாது! அவள்தான் இப்போது எங்கள் வீட்டு சர்வாதிகாரிணி!) நான் நிலை கொள்ளாமல் அலைவதைப் பார்த்துவிட்டு, “இன்றைக்கு உனக்கு என்ன வந்து விட்டது பப்பி?” என்று கேட்க ஆரம்பித்து விட்டாள்! அவளுக்கு என்ன பதில் சொல்வது நான்? “ஒன்றுமில்லை” என்று கட்டிக் கழித்து விட்டேன். ஆனால் அவள் பொல்லாதவள்! விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்டுவிட்டு.

என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து  விட்டாள். போதாத குறைக்கு நான் தாமரைப் பூ வர்ணப் புடவை ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டேன். “ஒகே! பத்மினி அல்லவா! அதனால்தான் தாமரைப் பூ கலர் புடவை தேர்ந்தெடுத்திருக்கிறாய்!” என்று காரணம் வேறு கற்பிக்க ஆரம்பித்து விட்டாள்! அன்று மாலை பெண் பார்க்கும் நிகழ்ச்சி சம்பிரதாயப்படி நடந்தது.

நான் வாய் திறந்து வார்த்தை பேசவில்லை. பெரியவர்கள் அழைத்தபோது வந்தேன்; அவரை வணங்கினேன். உடனே உள்ளே சென்ற விட்டேன். ராகினிதான் அவரிடம் ஏதேதோகேட்டுக்கொண்டிருந்தாள்.

இது சென்ற அக்டோபர் மாதம் நடந்த நிகழ்ச்சி.நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஆலப்புழையில் லலிதா வீட்டில் பாக்கு. வெற்றிலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. கேரளத்துப் பெரியவர் திருவாளர் மன்னத் பத்மநாபன் அவர்கள் முன்னிலையில்தான் அது நடந்தது. அன்று நானும் ராகினியும் டில்லியில் பாரதப் பிரதமர் முன்பு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறோம். நேருஜியின் முன்னால் நடனமாடியபோதும், என் மனமெல்லாம் ஆலப்புழையில் தான் இருந்தது.

1961-ஏப்ரல் இருபத்தேழாம் தேதி, திருமணத் தேதியாகக் குறிக்கப்பட்டது. அத்தனை கால இடைவெளி கொடுத்ததற்குக் காரணம். கைவசம் இருக்கும் பட ஒப்பந்தங்களையெல்லாம் நான் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்பதுதான்!  “நம் கடமையை முதலில் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும்.

அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம்! ” என்ற என் தாயார் அடிக்கடி எங்களுக்கு அறிவுரை கூறுவார். அவருடைய போதனையைப் பின்பற்றுவது தானே என் கடமை?திருமணத்திற்குப் பின் திரை உலகை நான் விட்டுவிடவேண்டுமென்பதுதான் ‘அவர்’ வீட்டாரின் அபிப்பிராயம்! 

ஏறத்தாழ ஐந்து மாத கால இடைவெளி படப்பிடிப்பு வேலைகள் முடியவில்லை. எனவே எனது திருமணத் தேதி மே மாதம் இருபத்தைந்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்படியும் என் வேலைகள் பூர்த்தியாகவில்லை. 23ம் தேதி வரை நான் படப்பிடிப்பு வேலைகளில் கலந்து கொண்டேன்.

திருமணத்திற்கு முந்தைய நாட்கள் ஒய்வு ஒழிவற்ற நாட்கள் தான்!  படப்பிடிப்பைத் தவிர, ராமாயண நாட்டிய நாடகத்திலும் நான் பங்கு பெற வேண்டியிருந்தது. 20. 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும் மாலையில் தொடர்ந்தாற்போல் நாட்டிய நிகழ்ச்சி, பகலெல்லாம் ஷூட்டிங்! 

Actress Padmini’s family interview

இருபத்திரண்டாம் தேதி கடைசி நாட்டியம், ராகினி ராமன், நான் சீதை வேஷப் பொருத்தம் வெகு ஜோர் என்று சொல்லாதவர்களே கிடையாது!  நாட்டியம் முடிந்ததும் ராகினி என்னிடம் வந்து “இனி இந்த ராமசந்திரன் உனக்கு வேண்டாம், அந்த ராமசந்திரன் போதும் அல்லவா?” என்றாள்! வேடிக்கையாகத்தான் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆனால் சொல்லி முடிப்புதற்குள் அவள் கண்கள் கலங்கி விட்டன. நெஞ்சை அடைத்தது. பிரிவின் துயரம் என்னையும் வாட்டியது. கடைசிவரை படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, இருபத்தி நாலாம் தேதி விமானம் மூலம் கொச்சிக்குப் புறப்பட்டேன்.

அங்கிருந்து கார் மூலம் குருவாயூர் செல்வதாக ஏற்பாடு!  விமான நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு உபசாரம் என்னைத் திணறடித்து விட்டது. நாதசுர இசையும், கலைஞர்களின் ஆசிச் சொற்களும், ரசிகர்களின் வாழ்த்தொலியும் சேர்ந்து கொண்டு, என்னை எங்கோ அழைத்துச் சென்று விட்டன.

என் மனநிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ‘ஒர் உலகிலிருந்து மற்றொரு உலகிற்குப் போகிறோம்! ’இந்த எண்ணம் என்னை என்னவோ செய்தது.

கொச்சி விமான நிலையத்திற்கு ராகினி வந்திருந்தாள். நாங்கள் நேராக திருச்சூருக்குச் சென்றோம். இரவை திருச்சூரில் கழித்துவிட்டு, பல பலவென்று விடியும்போது குருவாயூருக்கப் புறப்படுவதாகத் திட்டம். அனிறிரவெல்லாம் நானும் ராகினியும் திருச்சூர் ‘ராம விலாஸ்’ மாளிகையில் நேரம் போவது தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்.“நீ கலை  உலகில் தனி இடம் பெற வேண்டும்.

ராகினி நாட்டியக் குழு என்று ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். பெயரும் புகழும் அடைய வேண்டும். அதன் பிறகு என்னையும், லலிதாவையும் போல் திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்” என்றெல்லாம் ராகினிக்கு உபதேசித்துக் கொண்டிருந்தேன். 

பேசிக் கொண்டே இருந்தவர்கள், எங்களை அறியாமல் உறங்கி விட்டோம். “எழுந்திருங்கள், மணி மூன்றடித்து விட்டது” என்று யாரோ எழுப்பினார்கள். அவசர அவசரமாக எழுந்திருந்து காரில் குருவாயூரை நோக்கிப் புறப்பட்டோம். அன்றும் நான் தாமரைப் பூ வர்ணப்புடவை தான் கட்டிக் கொண்டேன்.

ராகினி என்னைக் கேலி செய்தாள்!  “இது தான் எனக்கு ராசி!  வெளியே யாரிடமும் இது பற்றிச் சொல்லாதே!” என்று ரகசியமாக அவளிடம் சொன்னேன். அந்தக் குறும்புக்காரியிடம் எந்த ரகசியமும் நிற்காதே! அநேகம் பேரிடம் சொல்லி விட்டாள் இதை!  அதனால்தான் நானே அதை உங்களுக்கு இப்போது சொல்லிவிட்டேன்! குருவாயூரில் ஒரே மழை!

 ஒருவேளை சிறு வயதில் நான் நிறைய அரிசி தின்றிருப்பேனோ என்னவோ? கோவிலுக்குள் பல திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு முறை சுற்றிலும் பார்த்தேன். என்னைப் போல் பல சகோதரிகள் குடும்ப வாழ்க்கையில் நுழையும் அக்காட்சி எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. விளக்குடன் கூடிய தட்டுக்களை ஏந்திய ஒன்பது கன்னிகைகள், என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

அதே போல் அவரையும் என்னிடம் அழைத்து வந்தார்கள். என் தம்பி சந்திரன் ‘அவர்’ கால்களை அலம்பினான். பின்னர் எங்கள் சம்பிரதாயப்படி அவர் எனக்கு முண்டு கொடுத்தார். பிறகு மோதிரம் மாற்றிக் கொண்டோம்.  

சரியாக 8-15க்குத் தாலி கட்டினார். என் உடல் புல்லரித்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நேரம் அல்லவா அது! பன்னிரண்டு மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட்டு ‘அவர்’ ஊரான தலைச்சேரி சென்றோம். அங்கு, மஞ்சள் துணி விரித்த மணையில் என்னை அமர்த்தினார்கள். அந்தக் கணத்திலிருந்து நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டேன். எங்கள் குடும்பத்தில் அவரும் சேர்ந்து விட்டார் என்றும் நான் சொல்லலாமே! 

29ந் தேதி சென்னைக்கு வந்தோம். 30ந் தேதி வரவேற்பு ஒன்று நடை பெற்றது. பெரியவர்களும், கலைஞர்களும் வந்திருந்து எங்களை ஆசீர்வதித்தார்கள். மீண்டும் சென்னையிலிருந்து என் புகுந்த வீடு புறப்படவேண்டிய தினம் வந்தது. என் தாயையும், என் சகோதரனையும், என் சகோதரி ராகினியையும்விட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய நாள்!  மனத்துக்கு வேதனையைத்தான் அளித்தது. ஆனால் அது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இன்ப வேதனை தான்! எனக்கு எப்போதுமே வளையல் என்றால் மிகவும் பிரியம்.

தலைச் சேரிக்குப் புறப்படும் அன்று, நான் வளையல் குவியல்களுக்கிடையே அமர்ந்து கொண்டு, வளையல் செலக்ஷனில் ஈடுபட்டிருந்தேன். எனக்காகக் காத்திருந்த அவர் பொறுமை இழந்து உள்ளே வந்து,“நீ சீக்கிரம் புறப்படு. உனக்கு வேண்டிய வளையல் வாங்கித் தருகிறேன். வளையல் அடுக்க ஒரு பெரிய பீரோவே ஏற்பாடு செய்து விடுகிறேன், புறப்படு” என்றார். 

உடனே புறப்பட்டு விட்டேன். அவர் வளையல் வாங்கிக் கொடுத்து, நான் அடுக்கிக் கொள்வதை விடப் பெரிய பேறு, வேறு என்ன இருக்கிறது எனக்கு? நான் புறப்படும் போது என் தங்கை ராகினி என்ன சொன்னாள் தெரியுமா ? சொல்லவே வெட்கமாகத்தான் இருக்கிறது! “அக்கா, அத்திம்பேர் வாங்கிக் கொடுக்கும் வளைகள் இருக்கட்டும், நாங்கள் நிறைய வாங்கி வைக்கிறோம், சீக்கிரம் வளைகாப்புக்கு வந்துவிடு” என்றாள். குறும்புக்காரி!

(02.07.1961 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.