ராகுலுக்கு சம்மன் அனுப்பியது அடிப்படை ஆதாரமற்றது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது அடிப்படை ஆதாரமற்றது,’ என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி இருவரும் பங்குதாரராக இருக்கும், ‘யங் இந்தியன்’ நிறுவனத்துக்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. சோனியாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால், வரும் 23ம் தேதி ஆஜராகும்படி புதிதாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அளித்துள்ள பேட்டியில், ‘காங்கிரஸ் உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் சொல்கிறேன், ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது அடிப்படை ஆதாரமற்றது.  பாஜ உறுப்பினர்கள் மீதோ அல்லது பாஜ ஆளும் மாநிலங்களிலோ அமலாக்கத் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை இரண்டும் சிலரை குறிவைத்தே நடவடிக்கை எடுத்து வருகின்றன. பணம் இருந்தால் தானே கையாடல் செய்வதற்கு. இந்த விவகாரத்தை பொருத்தவரை, நேஷனல் ஹெரால்டு  நிறுவனத்தின் கடனுக்கு பதிலாக பங்குகள் கைமாறி உள்ளன. இது வழக்கமான வங்கி நடவடிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பணபரிவர்த்தனையே நடக்கவில்லை. இது ஒருவரிடம் பர்சே இல்லாமல் பர்சை பறித்து கொண்டு ஓடியதாக கூறுவதாகும்,’ என தெரிவித்துள்ளார்.ராகுல் இன்று ஆஜர்நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். இதை முன்னிட்டு, ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.