குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்; போட்டியிட சரத் பவார் தயக்கம்?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் சரத் பவார் அதனை ஏற்கத் தயங்குவதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் ஜூலை 2ம் தேதி சரிபார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4,033 மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர். அவர்களின் வாக்கு மதிப்பு என்பது மக்கள் தொகையில் கணக்கிடப்படுகிறது. எடுத்துகாட்டாக உத்தர பிரதேச எம்எல்ஏவுக்கு அதிகமான வாக்கு மதிப்பு இருக்கும். மக்கள் தொகை குறைவாக கொண்ட வட கிழக்கு மாநில எம்எல்ஏக்களின் வாக்குமதிப்பு குறைவாக இருக்கும்.

மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,706 ஆக உள்ளது. அதாவது 49 சதவிகித வாக்குகள் உள்ளன. 51 சதவீதத்தை எட்டிப்பிடிக்க 13 ஆயிரம் வாக்கு மதிப்புகள் தேவை.

அதேசமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவிகித வாக்குகள் உள்ளன. எனவே ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது.

அதே நேரம் பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதேசமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு இடதுசாரி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் மம்தா செயல்படுவதாக கூறியுள்ளன.

இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால் அந்த சந்திப்பில் தேர்தலில் போட்டியிட சரத்பவார் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் சரத் பவார் போட்டியிட்டால் அவருக்கு மம்தா மற்றும் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.