நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் முடிவு ?

குவைத்சிட்டி,

இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக அராப் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அராப் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ வெளிநாட்டவர்கள் குவைத்தில் உள்ளிருப்பு போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று வகுக்கப்பட்டுள்ள விதிகளை மீறியதால், நாடு கடத்தப்பட இருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறியதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நாடு கடத்தல் மையங்களுக்கு அனுப்பி வைத்து பிறகு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க குவைத் அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாகவும், இவ்வாறு நாடு கடத்தப்படுபவர்கள் மீண்டும் குவைத் வருவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் இதுபோன்ற போராட்டங்கள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் அந்தத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போராட்டங்களில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட உள்ளவர்கள் எந்த நாட்டவர்கள், எத்தனை பேர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.