ரூ.1.5 லட்சம் கோடி செலவில் 96 நவீன போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்: இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்

புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1.5 லட்சம் கோடி செலவில் 96 நவீன போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் எல்லை மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது விமானப்படையை மேலும் பலப்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதற்காக, புதிதாக மேலும் 114 விமானங்கள் விமானப்படைக்கு வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், செலவை குறைப்பதற்காக 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகும்.இந்திய விமானப்படை தற்சார்பை அடைவதற்கான முயற்சியாக, ‘உலகளவில் வாங்கி, இந்தியாவில் தயாரிப்பது’ என்ற திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன. அதாவது, 114 விமானங்களில் முதல் 18 விமானங்கள் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும். அடுத்த 36 விமானங்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றிய அரசால் தேர்வு செய்யப்படும் இந்திய நிறுவனம் இணைந்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கும். இதற்கான தொகையை ஒன்றிய அரசு அமெரிக்க டாலராகவும், இந்திய ரூபாயிலும் கலந்து வழங்கும். எஞ்சிய 60 விமானங்கள் தயாரிக்கும் பணி முழுக்க முழுக்க இந்திய பங்குதாரர் நிறுவனத்தின் பொறுப்பில் விடப்படும். இதற்கு ஒன்றிய அரசு இந்திய ரூபாயில் மட்டும் முழு பணத்தை வழங்கும். இதனால், விமானம் தயாரிப்பதற்கான 60 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படுவது உறுதி செய்யப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான டெண்டரில் உலகின் முன்னணி போர் விமான தயாரிப்பு நிறுவனங்களான லாக்‌ஹீட் மார்ட்டின், போயிங், சாப், மிக், இர்குட் கார்ப்பரேஷன், டசால்ட் ஏவியேஷன் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.* ரபேல் போல் வசதிகள் வேண்டும்சமீபத்தில், பிரான்சிடமிருந்து 36 அதிநவீன ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டன. இவை, விமானப்படைக்கு மிகுந்த உதவிகரமாக இருந்தாலும், இந்த எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது. இதனால், 83 இலகுரக எம்கே 1ஏ ரக போர் விமானங்கள் வாங்க ஏற்கனவே ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஆனாலும், மிக் ரக போர் விமானங்களில் பல விடை பெறும் தருவாயில் இருப்பதால், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நவீன போர் விமானங்களை சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. ரபேல் போர் விமானங்கள் திருப்திகரமான செயல்பாட்டை கொண்டிருப்பதால், அந்தளவுக்கு நவீன விமானங்களையே புதுப்பிக்க விமானப்படை விரும்புகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.