அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு; ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது – ஓவைசி

லக்னோ,

ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக கடந்த மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேவேளை நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டுமென கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது.

இதனிடையே, இந்த போராட்டம், வன்முறையில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான நபர்களை போலீசார் கைது வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் நடந்த வன்முறையில் மூளையாக செயல்பட்டதாக அரசியல் விமர்சகரும், தொழிலதிபரும், இந்திய நலன் என்ற கட்சியின் நிர்வாகியுமான முகமது ஜாவித் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முகமது ஜாவிதை போலீசார் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு பின் பிரக்யாராஜ் நகரில் உள்ள முகமது ஜாவிதின் வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி அதை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாவித் அகமதுவின் மகள் அஃப்ரின் பாத்திமா. இவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இளநிலையும், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பட்டம் பெற்றவர். சமூக ஆர்வளராக கூறப்படும் அஃப்ரின் பாத்திமா குடியுரிமை திருத்தச்சட்டம், ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, தங்கள் வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டதாக அஃப்ரின் பாத்திமா தெரிவித்துள்ளார். வீடு எனது தந்தைக்கு சொந்தமானதல்ல. அது என் தாய்க்கு சொந்தமானது என அஃப்ரின் பாத்திமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் ஜாவித் வீடு இடிக்கப்பட்டதற்கு அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி சூப்பர் தலைமை நீதிபதியாகிவிட்டார். அவரின் சொந்த கோர்ட்டில் அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக அறிவிக்கலாம். அஃப்ரின் பாத்திமாவின் வீடு அவரின் தாயார் பெயரில் உள்ளது. 5 பேரை கொன்ற மத்திய இணைமந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் வீட்டை பாஜக ஏன் இடிக்கவில்லை?. ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.