சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி: முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்தவர் சின்னப்பபாரதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளி கு.சின்னப்பபாரதி (87) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னப்பாரதி சமூக சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டியவர். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துக்களை முன்னெடுத்து வந்தவர். மாணவப் பருவத்தில் இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் வழிநின்று இறுதி வரை பயணித்தவர்.

இலக்கிய படைப்புகளில் கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நவால்கள் பல மொழிகளில் பயணித்து, பரவலான வாசிப்பு வட்டத்தை பெற்றுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதிபலித்துள்ளது.

முதுமையை எட்டிய நிலையில் கு.சின்னப்பபாரதி ‘இலக்கிய கருத்தரங்கு நினைவு அறக்கட்டளை’ அமைத்து புதிய படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வந்தவர். இவரது இலக்கியப் பணி பல விருதுகளை வென்று, பாராட்டுதல்களை பெற்றுள்ளது. சமூகத்தை உள்வாங்கி, பிரதிபலித்து அதன் எதிர்கால பயணத்திற்கு சரியான திசைவழி காட்டும் படைப்பாளியை இலக்கிய உலகம் இழந்துவிட்டது.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.