தேர் கவிழ்ந்து விபத்து; 2 பக்தர்கள் பலி| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

பஞ்சாபி பாடகர் கொலையில்முக்கிய குற்றவாளிகள் கைது

புனே,-பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை, குஜராத்தில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூசேவாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். டில்லி திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடைய சித்தேஷ் காம்ப்ளே என்பவரை, புனே போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். கடந்த ஆண்டு புனேவில் நடந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளி சந்தோஷ் ஜாதவ் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில், சித்தேஷ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தோஷ் ஜாதவ் மற்றும் அவரது கூட்டாளி நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை, குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து, புனே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இவர்கள் மூவரும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.

தங்கை இறந்ததால் விரக்திசிதையில் குதித்த வாலிபர் பலி

போபால்-ஒன்றுவிட்ட தங்கை உயிரிழந்த வருத்தத்தில் இருந்த வாலிபர், தங்கையின் சிதையில் குதித்து தற்கொலை செய்தார். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாகர் மாவட்டம் மஜ்கவான் கிராமத்தில், 18 வயது இளம்பெண் ஜோதி தாகா, சமீபத்தில் காணாமல் போனார். அவரது உடல், ஊரில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோதிக்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த அவரது ஒன்று விட்ட சகோதரர் கரண், 21, மிகுந்த சோகத்தில் இருந்தார். சிதைக்கு முன், தரையில் புரண்டு கதறி அழுதார்.ஜோதியின் சிதைக்கு தீ வைத்த பிறகு, உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால், கரண் மட்டும் அங்கேயே இருந்துள்ளார். அனைவரும் சென்ற பிறகு, தங்கையின் சிதையில் அவர் குதித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் கரண் திரும்பாததால், அவரைத் தேடி உறவினர்கள் இடுகாட்டுக்கு சென்றபோது, சிதையில் கரண் இருப்பதைக் கண்டனர். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார்.தங்கையின் சிதைக்கு அருகிலேயே, கரணுக்கும் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. தங்கை மீதான பாசத்தில், அந்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் பயன்படுத்திய நடிகர் கைது

பெங்களூரு-‘பாலிவுட்’ நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகருமான சித்தாந்த் கபூர், 37, போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

அதிரடி சோதனை
பல்வேறு ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவரது சகோதரி ஷ்ரத்தா கபூர், ‘பாலிவுட்’ படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்தில், நடிகர் சித்தாந்த் கபூர் பங்கேற்றார். மொத்தம், 35 பேர் இந்த விருந்தில் பங்கேற்றனர். இங்கு, போதை பொருள் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ‘மரிஜ்வானா’ எனப்படும் போதை பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. விருந்தில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், நடிகர் சித்தாந்த் கபூர் உட்பட, ஐந்து பேர் போதை பொருள் உட்கொண்டது தெரியவந்தது.

ஐந்து பேர்
இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரையும், போலீசார் கைது செய்து அல்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.கன்னட திரை உலகை சேர்ந்தவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது, கடந்த 2020ல் வெளிச்சத்துக்கு வந்தது. நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோர், போதை பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்தவர்களிடம் அபராதம் வசூலிப்பு

பெங்களூரு-கர்நாடகாவில், மாநகர பஸ்களில், பெண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடக தலைநகர் பெங்களூரில் இயங்கும் மாநகர பஸ்களில், பெண்களுக்கு என தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து செல்வதாக, ஏராளமான புகார்கள் வந்தன.இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த, 170 ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக நிகழ்வுகள்

நீச்சல் குளத்தில் மாணவர் பலி

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த ஜெர்ரி மகன் ஜெட்டா 17. பிளஸ் 2 முடித்துள்ளார். இடைச்சிவிளையில் உள்ள தனியார் மரைன் கல்லூரி நீச்சல் குளத்தில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அங்கு நீரில் மூழ்கி பலியானார்.கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி திருச்செந்தூரில் மாணவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வந்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமது சொந்த நிதி ரூ.5 லட்சம் நிவாரண தொகையை மாணவரின் குடும்பத்திற்கு வழங்கினார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

போக்சோவால் தாளாளர் மறைவு; பூட்டை உடைத்து வகுப்புகள் துவக்கம்

தேவகோட்டை : தேவகோட்டை ஜமீன்தார் தெரு பள்ளி தாளாளர் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் தலைமறைவானார். பள்ளி பூட்டை உடைத்து வகுப்புகளை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.ஜமீன்தார் தெரு பள்ளி நிர்வாகத்தின் கீழ் தொடக்க, உயர்நிலை பள்ளிகள் அருகருகே உள்ளன.

பள்ளிகளின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 59. சில நாட்களுக்கு முன் இவர் மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். அவர் தலைமறைவானார். அவரிடம் சாவிகள் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.இது குறித்து கல்வி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. துணை தாசில்தார் அமுதா, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி, எஸ்.ஐ., தவமணி, சிறப்பு எஸ்.ஐ., சங்கர், வி.ஏ.ஓ.,க்கள் சந்திரசேகர், மணிமாறன் ஆகியோர் பூட்டை உடைத்து தொடக்கப்பள்ளியை திறந்தனர். தொடக்க பள்ளி கட்டடத்திலேயே இரு பள்ளி மாணவர்களையும் வைத்து பாடம் நடத்துமாறு உதவி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டனர்.

மானாமதுரையில் 1200 போலி மதுபாட்டில்கள்; இருவர் கைது

மானாமதுரை : மானாமதுரையில் போலீஸ் வாகன சோதனையின் போது அரசு ஒப்பந்த வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1,200 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் போலீசார் நேற்று முன்தி-னம் நள்ளிரவு 1:00 மணிக்கு எஸ்.ஐ., முகமது தாரிக்குல் அமீன் தலைமையில் போலீசார் சுந்தர், ரமேஷ் வாகன சோதனை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசின் குழந்தைகள் நலத்திட்ட ஒப்பந்த காரில் சோதித்தனர்.அதில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 1,200 போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். கார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பட்டுக்கோட்டை டிரைவர் கார்த்திகேயன் 32, ஜெயவீரபாண்டியனை 35, கைது செய்தனர். சோதனையின் போது தப்பிய மகேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இவர்களிடம் மதுவிலக்கு எஸ்.ஐ., பாண்டியன், போலீஸ் மலையரசன் விசாரிக்கின்றனர்.

latest tamil news

தேர் கவிழ்ந்த விபத்தில் பக்தர் இருவர் பலி; மூவர் படுகாயம்

தர்மபுரி : பாப்பாரப்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்ததில் பக்தர்கள் இருவர் இறந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 10ல் கரக திருநாளுடன் துவங்கியது.

பின், 11ல் தீமிதி விழாவும், கும்ப பூஜையும், 12ல் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு சுவாமி ரதம் ஏறுதலும், மாலை, 4:00 மணிக்கு மேல் தேரோட்டமும் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர். கோவிலை சுற்றி தேர் வந்தபோது, மாலை, 6:50 மணிக்கு தேரின் பின் சக்கரத்தின் அச்சாணி முறிந்தது. இதையறியாத பக்தர்கள், தேரை இழுத்த போது, பள்ளத்தில் சக்கரம் சிக்கி முன்புறமாக தேர் கவிழ்ந்தது.தேர் பீடம் பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.

அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பக்தர்கள் மற்றும் போலீசார் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பாப்பாரப்பட்டியை சேர்ந்த மனோகரன், 56, சரவணன், 60, இறந்தனர். மாதேஹள்ளியைச் சேர்ந்த முருகேசன், மாதேஸ் உட்பட மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன், பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:திருவிழாவின் போது, தேர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஒவ்வொரு நிலை அலுவலரும் கண்காணிக்க வேண்டும் என அரசாணை உள்ளது.

இந்த தேர் பழுதாகி உள்ளது; அதை புதுப்பிக்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளேன். அனைத்து துறை செயலர்கள் முதல், கலெக்டர் வரை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். கடந்த வாரம் தேரை நேரில் பார்வையிட்டு, அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மீண்டும் முறையிட்டேன். எவரும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் அலட்சியம் பல உயிர்களை பலி கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை

தஞ்சாவூர் : காதல் திருமணம் செய்த தம்பதியை, பெண்ணின் அண்ணனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, துலுக்கவேலி பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, 24; நர்சிங் படித்த இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.அங்கு வேலை பார்த்த, திருவண்ணாமலை மாவட்டம், பொன்னுாரைச் சேர்ந்த மோகன், 31, என்பவரை காதலித்துள்ளார்.

வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலை பெண் வீட்டார் ஏற்கவில்லை.மேலும், உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், சென்னையில் மோகனை திருமணம் செய்த சரண்யா, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துஉள்ளார்.’மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும்’ எனக் கூறிய சரண்யாவின் அண்ணன் சக்திவேல், 31, இருவரையும், நேற்று துலுக்கவேலிக்கு வரவழைத்துள்ளார்.

புதுமண தம்பதி இருவரும், நேற்று சென்னையில் இருந்து துலுக்கவேலிக்கு வந்தனர். நேற்று மாலை வீட்டுக்கு வந்த புதுமணத் தம்பதியை, சரண்யாவின் அண்ணன் சக்திவேல், உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர், அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், சரண்யாவும், மோகனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.தஞ்சாவூர் எஸ்.பி., ரவளி பிரியா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சக்திவேல், ரஞ்சித்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 பெண்களிடம் 27 சவரன் நகை திருட்டு; கும்பாபிேஷகத்தில் துணிகரம்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்ற 4 பெண்களிடமிருந்து 27 சவரன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில், காளி கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. விழாவில் ஏரளமான பெண்கள் பங்கேற்றனர். இதில், கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி சொர்ணபுஷ்பம், 60; என்பவரிடமிருந்து 13 சவரன் தாலிச் செயின். சிதம்பரம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி விஷ்ணுபிரியா, 25; என்பவரிடமிருந்து 7 சவரன் செயின்.கம்பன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சிவருத்ரா, 31; என்பவரிடமிருந்து 5 சவரன் செயின். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடம் 2 சவரன் செயின் என மொத்தம் 27 சவரன் நகையை மர்ம நபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியுள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.