முகமது நபிகள் விவகாரம் | மன்னிப்பு கோருமாறு தானே நகர காவல்துறை வெப்சைட்டை முடக்கிய ஹேக்கர்கள்

தானே: முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் உலகில் வாழும் இஸ்லாமிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பை இந்தியா தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தானே நகர காவல்துறை வலைதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மற்றொரு நாடோ அல்லது அமைப்போ அது எதுவாக இருந்தாலும் குண்டுகளை மட்டுமே கையில் எடுத்து போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தொழில்நுட்பத்தின் துணை கொண்டு சைபர் போரையும் அவர்கள் கையில் எடுக்கலாம். அதன் மூலம் இயல்பு வாழ்க்கையை பாதிக்க செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த வகையில் முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தில் இந்திய அரசு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் தானே நகர காவல்துறை வெப்சைட்டை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட தானே காவல் துறையின் வலைதள பக்கத்தில் ஒரு நிலையான தகவல் திரையில் தெரிகிறது. “இந்திய அரசுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். திரும்ப திரும்ப மதம் சார்ந்த சிக்கல்களை இஸ்லாமிய மக்களுக்கு கொடுத்து வருகிறீர்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடம் விரைந்து உங்களது மன்னிப்பை தெரிவித்துக் கொள்ளுங்கள். எங்களுடைய இறைத்தூதரை இழிவு செய்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு நிற்க மாட்டோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை One Hat Cyber Team என்று குழு செய்துள்ளதாக தெரிகிறது. இணையதளம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தானே சைபர் பிரிவு காவலர்கள் அதனை சிறிது நேரத்திலேயே சரி செய்தனர். தற்போது அந்த வலைதளம் எப்போதும் போல் இயல்பு நிலையில் இயங்கி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.