மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அன்பகம் இல்லம் நடத்தி வரும் ஞானசம்பந்தம்- கலாவதி தம்பதி பராமரிப்பில் 2 கைகளையும் இழந்த லட்சுமி (17) என்பவர் வளர்ந்து வருகிறார். இவர், மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். கடந்த 20ம் தேதி தேர்வு முடிவு வெளியானதில் லட்சுமி 277 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 2 கைகளும் இல்லாத மாணவி, ஆசிரியர் உதவியுடன் தேர்வெழுதி சாதனை படைத்ததுடன் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். சாதனை படைத்த மாணவி மற்றும் அவரை பராமரித்து வரும் அன்பகம் காப்பகத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஓவியம் வரைவதில் லட்சுமிக்கு ஆர்வம் அதிகம். கைகள் இல்லாவிட்டாலும் தனது கால்களால் ஓவியங்களை வரைந்து வந்தார். 10 வயதில் கரகம் ஆடுவதை கற்று கொண்டார். மேலும் வில்லுப்பாட்டு, கர்நாடக சங்கீதம், ரங்கோலி கோலம் போடுதல் என பல்வேறு திறமைகளை வளர்த்து கொண்டார். தற்போது பிளஸ்2 தேர்விலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை கலெக்டர் லலிதா நேரடியாக சென்று மாணவி லட்சுமியை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அப்போது மேற்கொண்டு என்ன படிக்க ஆசை என்று கேட்டபோது, ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஓவியக்கலையில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை லட்சுமி தெரிவித்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் லட்சுமியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததோடு, லட்சுமி மேற்கொண்டு படிக்கும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தெரிவித்தனர்.இதுகுறித்து மாணவி லட்சுமி கூறுகையில், எனக்கு பெற்றோர் என்றால் அது இந்த காப்பகத்தின் ஞானசம்பந்தம்- கலாவதி அம்மாவும்தான். நான் ஓவியராக ஆசைப்படுகிறேன். அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்து படித்து ஓவியராகும் கனவை நிஜமாக்குவேன் என்றார்.
