maharashtra political crisis: சிவசேனா எம்எல்ஏக்கள் மேலும் 3 பேர் ஓட்டம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி ( மகா விகாஸ் அசாகி) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் கவுகாத்தில் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் தங்கியுள்ளார். கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை கட்சி தலைமை கொறடா பதவியில் இருந்து நீக்க சிவசேனா உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நேற்று தகவல் வெளியானது. இதனால் மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சிவசேனா கட்சியை சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்கள் ஏக்நாக் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு கவுகாத்திக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்த மூன்று எம்எல்ஏக்களுடன் சேர்த்து தமக்கு மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

ஏக்நாத் ஷிண்டே இன்று காலை 11 மணியளவில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அப்போது கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு திரும்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் உத்தவ் தாக்கரேயும் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளதால் மகாராஷ்டிர மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பதும்,காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து வெளியேற வேண்டும்’ என்பதுமே சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.