நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு: ராதாகிருஷ்ணன் உத்தரவு!

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார் எழுந்த நிலையில் கள ஆய்வு மேற்கொள்ளுமாறு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமம் வெடால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்ததால் முளைத்து சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் கிராமத்தில் நியாய விலைக்கடையில் புழுத்து போன அரிசி விநியோகம் செய்யப்பட்டதாகவும் புகைப்பட செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு மாவட்ட மண்டல மேலாளர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை உடனடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அறிவுறித்தினார்.

1. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமம் வெடால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கள ஆய்வு செய்யப்பட்டத்தில் சுமார் 300 மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமாகும் நிலையில் உள்ளது என்பதும் இதற்கு மூட்டை அடுக்கும் போது கீழே தார்ப்பாய் போடாதது தான் காரணம் என அறியப்பட்டு கொள்முதல் அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பட்டியல் எழுத்தர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்போது உள்ள 20,000 மெட்ரிக்டன் நெல்லை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு விரைந்து அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓபிஎஸ் மீது தாக்குதல்… ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலை என்ன?

2. இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர், துணை பதிவாளர் (பொ விநி) மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோர் பட்டிணம்காத்தான் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் கள ஆய்வு மேற்கொண்டதில் தரமான பச்சரிசி நியாய விலைக்கடையில் இருப்பு இருந்தது கண்டறியப்பட்டது. பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தரமான அரிசி நியாயவிலைக்கடையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிய வந்தது. புகைப்படத்தில் உள்ளவாறு தரமற்ற அரிசி பொது மக்களுக்கு விநியோக செய்யப்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3. மேலும் நியாயவிலைக்கடைகளில் ஏதவாது ஒரு காரணத்தினால் அரிசி கழிவுகள் மற்றும் விநியோகிக்கப்படாத அரிசி பழுதடைந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை கிடங்களுக்கு திருப்பி அனுப்பி தரமான அரிசி மட்டுமே நியாய விலைக்கடையில் விநியோகம் செய்வதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் மழை நீர் புகாத வண்ணம் பாதுகாப்பான நிலையில் வைக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

5. தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களுக்கு தரமான பொருட்கள் நியாயவிலைக்கடைகள் மூலமாக கிடைப்பதையும், விவசாயகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் போன்ற பொருட்கள் பாதுகாப்பாக கிடங்குகளுக்கும் ஆலைகளுக்கும் அனுப்புமாறு அவ்வபோது நடத்தும் ஆய்வில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கூட்டுறவுத்துறை அமைச்சரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும் சென்னை மற்றும் மாவட்டங்களில் சென்று ஆய்வுகளில் அவ்வப்போது அதனை வலியுறுத்தி மேற்பார்வையிட்டும் வருகின்றனர்.

எந்தெந்த ஊர்களில் மழைக்கு வாய்ப்பு? வெளியான தகவல்!

6. ஏற்கனவே அரசு அறிவுறுத்தியவாறு அந்தந்த மட்டத்தில் மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மண்டல மேலாளர்கள் அவ்வபோது ஆய்வு மற்றும் மேற்பார்வை செய்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைத்தும் உடனுக்குடன் கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளுக்கு அனுப்பவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.