துரைப்பாக்கம்: ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் மணிவண்ணன் (37). ஐ.டி.நிறுவன ஊழியர். இவர், உடன் பணிபுரிந்த தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்த செல்வியை (31) காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, சாய்ரோஷன் (9) என்ற மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது கணவரை பிரிந்து, தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், மணிவண்ணன் முதல் திருமணத்தை மறைத்து, வேறு ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்தது தெரியவந்தது. இதுபற்றி செல்வி மணிவண்ணனிடம் கேட்டபோது, மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வியை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதுகுறித்து, செல்வி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நேற்று தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் எதிரே, தனது மகன் மற்றும் சகோதரியுடன் செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அங்கு பணியிலிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
