உண்மையான தகவல்களை மக்கள்மயப்படுத்துவது பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் பொறுப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்குப் பாராளுமன்ற முறைமை தொடர்பில் விசேட ஒரு நாள் செயலமர்வு (28) நடைபெற்றது.

பாராளுமன்றம், வெகுசன ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கிடையில் வலுவான உறவை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில், பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மு.ப. 8.30க்கு செயலமர்வு ஆரம்பமாகியது. இங்கு ஊடகவியாளர்கள் மத்தியில் உரையாற்றிய சபாநாயகர், சட்டமியற்றும் உயர்ந்த நிறுவனமான பாராளுமன்றம் தொடர்பான அறிக்கையிடலில் மிகவும் உண்மையான தகவல்களை மக்கள்மயப்படுத்துவதில் பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாகக்  குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பாராளுமன்றம், ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கிடையில் வலுவான உறவைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெளிவுபடுத்தினார். பாராளுமன்ற செயலகம், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற  சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர உரையாற்றினார்.

பாராளுமன்ற குழு முறைமை தொடர்பில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க தெளிவுபடுத்தியதுடன், சட்டமியற்றும் முறை மற்றும் பாராளுமன்ற மொழியியலின் முக்கியத்துவம் தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் திணைக்கள (பதில்) பணிப்பாளர் எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.  

பாராளுமன்றத்திலுள்ள டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேஷ் பெரேரா தெளிவுபடுத்தினார். மேலும், படைக்கல சேவிதர் திணைக்களத்துடன் செயற்படும் போது ஊடகவியலாளர்களுக்கு முக்கியமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து தெளிவுபடுத்தினார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த செயலமர்வில் பாராளுமன்ற இணைப்புப் பொறியியலாளர் லலித் அதிகாரி அவர்களும் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வுக்கு என்.டி.ஐ. (National Democratic Institute) நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.