விழுப்புரம்: தனிநபர் இடத்தை அபகரிக்க முயன்றாரா மாவட்ட சேர்மன் – இருதரப்பும் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட தென்னமாதேவி கிராமத்தின் முக்கிய சாலை ஓரமாக இருக்கும் 36 சென்ட் இடத்தை விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் (மாவட்ட சேர்மன்) அபகரிக்க முயன்று வருவதாக கூறி, கனகராசு என்பவர் 29.06.2022 அன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகாரை அளித்த கனகராசுவிடம் பேசினோம். “அந்த இடம் மொத்தம் 20 ஏக்கர் 49 சென்ட். அதில், 7 ஏக்கர் 77 சென்ட் நிலத்தை 38/1a என்றும்; 1 ஏக்கர் 3 சென்ட் இடத்தை 38/1b என்றும் பிரித்து கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தை அப்பகுதியை சேர்ந்த சுமார் 60 பேருக்கு… கால் காணி, அரை காணி, 10 சென்ட், 20 சென்ட் என அரசாங்கம் பட்டா வழங்கியுள்ளது. அதன்படி, 1983-ம் ஆண்டு பட்டம்மாள் என்பவருக்கும் 48 சென்ட் நிலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வாடகைக்கு பெட்டிக்கடை நடத்தி வந்த நான், அதில் 36 சென்ட் இடத்தை மட்டும் கடந்த 2016-ம் ஆண்டு பட்டம்மாளிடமிருந்து கிரையமாக பெற்றேன்.

புகார்

பின், என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய பலமுறை அரசு அதிகாரிகளை அணுகியபோதும் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. அதனால் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 12 வாரங்களுக்குள்ளாக விசாரித்து பட்டா மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 12 வாரங்களை கடந்தும் அது விசாரணையையிலேயே உள்ளது. இதற்கிடையில் அந்த இடத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் நடந்ததால், எனது மகனின் பெயருக்கு அவ்விடத்தை தானசெட்டில்மெண்ட் செய்ய பதிவுத்துறையை அணுகினேன். ‘அந்த இடம் அய்யனார் கோவிலுக்கு சொந்தமானது’ என வட்டாட்சியர் கடிதம் உள்ளதாக நிராகரித்துவிட்டனர். இதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் ரிட் மனுவை நான் தாக்கல் செய்துள்ள நிலையில், சர்ச்சை இடம் அப்படியே இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதத்தில் இடைக்கால தடை போட்டது நீதிமன்றம். ஆனால் கடந்த 24, 25 தேதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, தாசில்தார் இளவரசன் உடந்தையோடு வந்த ஜெயசந்திரன் அங்கிருந்த மரங்களை ஜே.சி.பி-யால் பிடுங்கியதோடு, எங்களுக்கும் மிரட்டல் விடுத்தார். ஊர்மக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து அதை தடுத்து நிறுத்தினோம்.

இது கோயில் இடமென 2016-ம் ஆண்டிலிருந்தே பொய்யாக கூறி என்னிடம் பிரச்னை செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு, அதே இடத்திற்கு அவர் பெயரில் பட்டா தரவேண்டுமென ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கேட்டிருந்தார். அவருக்கு அதிகாரம் இல்லை என அதை தடுத்துவிட்டேன். அதன்பின் மூன்றாவது நபர் ஒருவருக்கு தானசெட்டில்மென்ட் செய்ய முயன்றார், அதையும் தடுத்துவிட்டேன். இப்படியாக அந்த இடத்தை அபகரிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகிறார். ஆனால், அந்த இடத்திற்கான ஆவணம் முழுவதும் என் பெயரில்தான் இருக்கிறது. கடந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அவருக்கு எதிராக நான் போட்டியிட்ட காரணத்தினாலும், மற்றொரு இடத்தில் அவர் நிலம் உள்ள பகுதியின் எதிரே நான் 18 சென்ட் நிலம் வாங்கியதாலும் வன்மம் கொண்டு இவ்வாறு செய்துவருகிறார். ஆனால், அவர்தான் 31 சென்ட் குட்டையை மடக்கி ஃபிளாட் போடுவதற்கு முயன்று வருகிறார். 2 ஏக்கர் 64 சென்ட் அளவிலான பொதுப்பணித்துறை வாய்க்காலில் முறைகேடாக சாலை அமைத்திருக்கிறார். ‘நான்தான் ஊரில் டான்’ என்பது போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என் கடைக்கு மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றால், அவர் பெயரைக் கேட்டதும் அதிகாரிகள் அலறுகிறார்கள். இப்படியாக தமது அதிகாரத்தை பயன்படுத்தி என் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் ஜெயசந்திரன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரனிடம் பேசினோம். “இந்தப் பிரச்னைக்கு உரிய இடம் 1917-ல் எங்கள் தாத்தாவால் கோயிலுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட சொத்து. கோயிலுக்கு அருகாமையில் இருந்த நிலத்தை வாங்கிய போது, கோயிலுக்கு எதிரே இருந்த சுமார் 90 சென்ட் நிலத்தை கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் புளிய மரங்களை நட்டு கோயில் நிர்வாகம்தான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 1987-ம் ஆண்டு வரை எங்களுடைய மூதாதையரின் பெயரில்தான் அந்த இடம் வருகிறது. அதில் 15 சென்ட் நிலம் சாலை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமிருந்த 75 சென்ட் நிலம், “நில உடமை மேம்பாட்டு திட்டத்தின்” போது அப்பகுதியில் தற்காலிகமாக அனுபவித்து வந்த இருவருக்கு சரியாக விசாரிக்காமல் பட்டா அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நபரான பட்டம்மாள் என்பவரிடம் இருந்துதான் கனகராசு அந்த இடத்தை கிரையம் வாங்கியிருக்கிறார். பட்டம்மாள் என்பவருக்கு கணவர் பெயரையே மாற்றி கிரையம் பெற்றுள்ளார் என்பது வேறு. கோயில் சொத்தை வாங்கியதால், அப்போது ஊரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. கலெக்டர், தாசில்தாரை விசாரித்து பதிலளிக்கும்படி கூறிவிட்டார்.

ஆகவே, நிலத்தை கோயிலுக்கு தானமாக கொடுத்தவர்களின் வம்சாவழியினரிடம் விசாரித்ததின் பெயரில், “இது உண்மையாகவே கோயிலுக்கு சொந்தமான இடம்தான். யாருக்கும் தவறாக பட்டா மாறுதல் செய்ய கூடாது” என்று சப்-ரிஜிஸ்டாருக்கு தபால் அனுப்பிவிட்டார் தாசில்தார். அதை மீண்டும் கோயில் நிலமாக மாற்றிதர வேண்டும் என்றும் எங்கள் தரப்பிலும் ஆர்.டி.ஓ-விடம் மனு கொடுத்தோம். அதற்கான விசாரணையும் நடந்தது. இந்நிலையில் தான், “25 ஆண்டுகளாக அந்த இடத்தை அனுபவித்து வந்ததாகவும், தற்போது கட்டடம் கட்டி அனுபவித்து வருவதாகவும், எனக்குதான் அந்த இடம் சொந்தம்” எனவும் மாவட்ட மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெட்டிசன் போட்டார் கனகராசு. 12 வாரத்தில் விசாரணை மேற்கொண்டு பட்டா மாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதின் படி, பழைய ஆவணங்களை எல்லாம் எடுத்து தாசில்தார் ஆய்வு செய்து, உண்மை தன்மையை டி.ஆர்.ஓ அவர்களுக்கு அனுப்பினார்கள். மேலும், இந்த இடம் கோயில் இடம்தான் என்பதால் இந்து சமய அறநிலையத் துறையிலும் நாங்கள் முறையிட்டோம்.

ஜே.சி.பி இயந்திரம்

அவர்களும் ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் அளந்து பார்த்தார்கள். அப்போது கனகராசு கூறும் அனுபவ இடமும், பட்டா வழங்கப்பட்ட இடமும் வேறு வேறு என்பது தெரியவந்தது. அதாவது கோயிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் தான் அவருடைய கடை உள்ளது (38/1a). நில உடைமை மேம்பாட்டு திட்டத்தின் போது முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட இடம், அனுபவம் ஏதும் இல்லாமல் தனியாக தான் இருக்கிறது. இரண்டுமே கோயில் சொத்துக்கள் தான். இந்நிலையில், மற்றொருபுறம் தாசில்தார் தரப்பினரும் அந்த இடத்தை நில அளவை செய்தனர். அப்போது நில அளவை செய்வதற்கு தொந்தரவாக இருந்த புதர், மரங்களை அகற்றுவதற்கு தான் ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இவை கோயில் சொத்துக்கள் தான் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்கிறார்.

மேலும், இது குறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியர் இளவரசனிடம் பேசினோம். மாவட்ட சேர்மன் குறிப்பிட்டவற்றையே கூறியவர், “நில உடமை மேம்பாட்டு திட்டத்தின்போது பட்டா வாங்கிவிட்டதினால் மட்டுமே அவ்விடம், அந்த நபருக்கு சொந்தம் என நாம் சொல்லிவிட முடியாது… நீதிமன்ற உத்தரவுப்படி, முறையாக ஆய்வு செய்து ரிப்போர்ட்டை நான் கொடுத்துவிட்டேன்” என்றார்.

இருதரப்பு விளக்கங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு இருப்பதினால், மாவட்ட நிர்வாகமே உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.