ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம்: ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு

வேலூர்: தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் மீண்டும் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.2,500 வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது கிராம ஊராட்சிகளில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அடுத்து வந்த அதிமுக ஆட்சி காலத்தில் 8.11.2011ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  அதற்கேற்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8.04.2022 அன்று சட்டமன்றத்தில், மாநிலத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி, விருப்பம் தெரிவித்த மக்கள் நலப்பணியாளர்கள் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த ஊதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிர்வாக தலைப்பில் இருந்து வழங்கப்படும். அத்துடன், மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு அவர்களை அப்பணிகளை கூடுதலாக கவனிக்கவேண்டும். இதற்காக மாதந்தோறும் ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 கூடுதலாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பூதியமாக கிடைக்கும்.  இதுதொடர்பாக அனைத்து கலெக்டர்களுக்கும் ஊராட்சிகள் இயக்குநரகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.