எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில்

சென்னை : லீனா மணிமேகலை வெளியிட்ட ‛காளி' போஸ்டரில் காளி தெய்வம் புகைப்பிடிப்பது போன்று இருந்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீது பல ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எதற்கும் அஞ்சமாட்டேன், உயிரைவிடவும் தயார் என பதில் கொடுத்துள்ளார் லீனா. இதனிடையே இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி என லீனாவிற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி, நடித்து வரும் டாக்குமென்டரி படம் 'காளி'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப்படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. “அரெஸ்ட் லீனா மணிமேகலை” என்ற ஹேஷ்டாக் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து வினி ஜிண்டால் என்ற வழக்கறிஞர் டில்லி போலீசில் லீனா மீது புகார் கொடுத்துள்ளார். இதேப்போல நெல்லை உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதற்கு லீனா மணிமேகலை, “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்'' என தெரிவித்துள்ளார்.

குஷ்பு எதிர்ப்பு
இந்த விவகாரத்தில் லீனாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் குஷ்பு. அவர் கூறுகையில், ‛‛படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, வன்மையான கண்டங்கள்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.