டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம் – நடுவானில் நடந்தது என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியயதாவது:

விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது..

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், “விமானத்தின் இறக்கைகளில் எரிபொருள் குறைந்து வருவதை விமானிகள் கவனித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து அதன் இடது இன்ஜினில் தீப்பிடித்ததால், புறப்பட்ட உடனேயே பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.