`கோயில் சொத்துகளின் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால்…’ – நீதிமன்ற கருத்தும் பின்னணியும்

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு:

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பராமரிப்பு, சொத்துகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும், வாடகை மற்றும் குத்தகை தொகையை வசூலிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கனது, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர் அருண் நடராஜன் ஆஜராகியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் – கோவில் சொத்துகள்

நீதிமன்ற சிறப்பு அமர்வு தமிழ்நாடு அரசுக்கு மொத்தம் 75 உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன. அந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையின் போது பேசிய வழக்கறிஞர் அருண் நடராஜன், “மொத்தம் உள்ள 75 உத்தரவுகளில், 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 32 உத்தரவுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஐந்து உத்தரவுகள் மாநில அரசுக்குச் சம்பந்தம் இல்லை” என்றும் கூறினார்.

கோவில் நிலம் மீட்பு:

தொடர்ந்து பேசியவர், “தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படுகின்றன. அதற்கான பணிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருகால பூஜை நடக்கும் கோவில்களுக்கான நிதி இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில தணிக்கை துறைத் தலைவர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து கோவில் கணக்குகளைத் தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நில குத்தகை வருவாயில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிக்கவும், விவசாய நிலங்களுக்கு உரிய வாடகை நிர்ணயம் செய்யவும், தொகை செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3,66,019 கோயில் சொத்துக்களில் 99,077 சொத்துக்கள் மட்டுமே வருமானம் ஈட்டி வருகின்றன. மீதமுள்ள 2,66,942 சொத்துக்களையும் வருமானம் ஈட்டும் வகையில் கொண்டுவர துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான 5.82 லட்சம் ஏக்கர் நிலங்களில் 3.79 லட்சம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 68,219 ஏக்கர் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கும் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயில்களில் மதிப்பு மிக்க பொருட்களை வைக்க அறைகள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுக்கவேண்டும்:

அப்போது பேசிய நீதிபதிகள், “கோயில் நிலங்களை மீட்கும் பணியில் எந்த தொய்வும் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும். அறநிலையத்துறை சொந்தமான கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுக்கவேண்டும். அனுமதியற்ற குத்தகைகளை ரத்து செய்யவேண்டும். அதிகாரிகள் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அறநிலையத்துறை கோயில்களின் சொத்துகளின் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தல், தமிழ்நாட்டில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்.

கோயில்

கோயில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை மற்ற துறைகள் ஏற்கவேண்டும். தணிக்கையில் குறைந்தது 15 தணிக்கையாளர்கள் இருக்க வேண்டும். அறநிலைய கோயில் பணிகளுக்குத் தனிநபரோ, தனியார் அறக்கட்டளை மூலம் நிதி வசூல் செய்வதை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்யும் இணையதளங்கள் உடனடியாக முடக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த விசாரணையில் தாக்கல் செய்யவேண்டும்” என்று கூறி அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டு திருத்தபட்ட பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 58,692.68 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 92,529.43 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்த சுழலில், அறநிலையத்துறை வருவாயை முறையாக வசூல் செய்தல் நிதிப்பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யமுடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறை

இதுதொடர்பாக அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தற்போதைய நிலையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல சொத்துகளிலிருந்து வருமானம் ஈடுபடுவது கிடையாது. அதற்கான முன்னெடுப்பு தற்போது தான் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், எவ்வளவு வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.