‘சொந்த வீட்டிற்கே சூன்யம் வைத்து விட்டீர்களே’ – வி.கே. சசிகலா ஆதங்கம்

“ஒருசிலரின் அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? சிலரின் சுய விருப்பு, வெருப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூன்யம் வைத்து விட்டீர்களே” என்று சசிகலா வேதனையுடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நடந்துவரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக தொண்டர்களை சந்திக்க அரசியல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜூன் 26 ஆம் தேதி சசிகலா திருத்தணியில் முதல் கட்ட அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, வி.கே. சசிகலா திண்டிவனத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்தார். பின்னர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் அருகே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அங்கே திரண்டிருந்த தொண்டர்கள் அவருகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வி.கே. சசிகலா அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொண்டர்கள் தான் உயிர், தொண்டர்கள் தான் உடல் என்று வாழ்ந்தார்.

அதேபோல், தொண்டர்கள் இயங்கினால் தான் கட்சி இயங்கும் என்றும், தொண்டர்கள் இயங்குவதை நிறுத்தினால் கட்சியின் இயக்கம் நின்றுவிடும் என்றும் தீர்க்கதரிசமாக அன்று கூறியதோடு அதனை நடைமுறைப் படுத்தியதால் தான் அதிமுக வலுவாக இருந்தது.

அதன் பின்பு, அம்மா (ஜெயலலிதா) கட்சிக்கு வந்த அத்தனை சோதனைகளையும், சாதனைகளாக்கி சாமானியர்களுக்கு பரிசளித்தார். புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு மாலுமி இல்லாத கப்பலாக காணப்பட்ட கட்சியை கலங்கரை விளக்கமாக நின்று கப்பலை செலுத்தியவர் நமது அம்மாதான்.

பல்வேறு சூழ்ச்சிகளால் ஆட்சியை இழந்த அதிமுகவை இரண்டே ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் அம்மா; அதே போல, தமிழகத்தில் பல குடும்பங்களின் அழிவிற்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டை ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள்.

ஆனால், தற்பொழுது அந்த லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடைபெறுவதாக செய்திகளில் வருகின்றது. அதே போல, இன்றைய இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் சாதாரணமாக கிடைக்கிறது என்று செய்தித்தாள்களில் படிக்கும் போது வேதனையாக உள்ளது.” என்று சசிகலா கூறினார்.

தொடர்ந்து பேசிய சசிகலா, “ஒரு சிலரின் சுயநலத்தால் நமது வெற்றி சின்னம்.. இரட்டை இலை சின்னதில் நமது கழக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனையை அளிக்கின்றது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து தாங்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக சாதாரண கழகத் தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது கழக தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம்.

ஒருசிலரின் அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களுடைய சுய விருப்பு, வெருப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? இதன் மூலம் சொந்த வீட்டிற்கே சூன்யம் வைத்து விட்டீர்களே.

புரட்சித்தலைவரும், புரட்சிதலைவியும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இந்த இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது? ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருபப்படி கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை, அதே போன்று புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்ய எந்த தொண்டர்களும் மனப்பூர்வமாக விருப்ப வில்லை.

இந்த விஷயத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்தால் அதுவே நாம் இரு பெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக்கடனாகும்.” என்று கூறினார்.

மேலும், “திமுகவினர் நமது இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நமது கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால், எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது நம் இயக்கம். திமுகவினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் ஒன்றை மட்டும் வலியுறுத்தி சொல்லிக்கொள்கிறேன், வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்குகின்றது என்ற அம்மாவின் எண்ணம் ஈடேற வேண்டும்” என்று வி.கே. சசிகலா கூறினார்.

இதையடுத்து, சசிகலா செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக அலுவலகத்துக்கு எப்போது போகப்போகிறீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். “நான் அதிமுகவின் பொதுச் செயலாளர். நிச்சயம் போக வேண்டிய நேரம் வரும்போது நான் போவேன். நான் எப்போதுமே நியாயப்படி செய்கிற ஆளு. அதனால், நான் எங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து போவேன். நான் அமைதியாக இருக்கிறேன் என்பது கிடையது. நான் எப்போதும் என்ன செய்யவேண்டுமோ அதை முறையாக செய்துகொண்டு வருகிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.