மும்பையில் கனமழை: பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகன ஓட்டி பரிதாப பலி

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ளது.

மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தானேவில் மழைநீர் தேங்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் பள்ளத்தில் வண்டியுடன் விழுந்த நபர் மீது பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கனமழை தொடர்வதால் ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் சில இடங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிகபட்சமாக மும்பை சான்டா குரூஸ் பகுதியில் 193.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரையிலான மழையளவு இருந்தால் அது கனமழை என்றும், அதுவே 115.6 மிமீ முதல் 204.4 மிமீ மழை பெய்திருந்தால் அது அதிகனமழை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையையும் முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தேவைப்படும்போது இன்னும் கூடுதல் படைகள் வரவழைக்கப்படும் என்று முதல்வர் ஷிண்டே தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் நகர் முழுவதும் பரவலாக போக்குவரத்து முடங்கியிருந்தாலும் ஒரு சிறு ஆறுதலாக லோனாவாலா காட் பகுதியில் மழை சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் மழை குறைந்துள்ளதால் மும்பை – புனே இடையிலான போக்குவரத்து சீரடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.