இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன?

டெல்லி: இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ள. இதில் லோக்சபா எனப்படும் மக்களவை பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள்.

மேலவை எனப்படும் ராஜ்யசபா நிரந்தரமான சபை, இதில் 245 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 233 பேர் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12 பேர் குடியரசு தலைவரால் பல்துறையில் சிறந்து விளக்கும் நிபுணர்களை கவுரவிக்கும் வகையில், நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். அதாவது, சட்டப்பிரிவு 80(3)ன் கீழ், நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், இலக்கியம், அறிவியல், கலை போன்ற விஷயங்களில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நியமன உறுப்பினர் நியமிக்கப் பெற்ற ஆறு மாதங்களுக்குள் கட்சியில் சேரலாம்.

ராஜ்யசபாவை ஒருபோதும் கலைக்க முடியாது. சபை தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டாம் ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். அரசியலமைப்பின் 83(1) பிரிவின் கீழ், காலியிடங்களை நிரப்ப  தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. உறுப்பினர்கள் ராஜினாமா, இறப்பு அல்லது தகுதி நீக்கம் காரணமாக ஏற்படும் காலியிடங்கள் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படுகின்றன, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு முன் பதவியில் இருந்தவர்களின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு சேவை செய்கிறார்கள்.

தற்போது ராஜ்யசபா நியமன எம்.பிக்களுக்கான 7 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இதில்,   இசையமைப்பாளர் இளையராஜா உள்பட 4 பேரை நியமன எம்.பி.க்களாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த  இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளது.

இவ்வாறு நியமனம் செய்யப்படும் எம்.பி.க்கள், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால், மற்ற எம்.பி.க்கள் போல அனைத்து சலுகைகளையும் பெறலாம். அதாவது, இவர்களுக்கு டெல்லியில் எம்.பி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இதுதவிர பிற எம்.பிக்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள்.

நியமன உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது கட்சியில் சேர விரும்பினால் அதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் கட்சியில் சேராமல் பின்னாளில் சேர முடிவெடுத்தால் அவர்கள் நியமன உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம், கவன ஈர்ப்பு நோட்டீஸ் தருவது உள்பட எல்லா அலுவல் நடைமுறைகளிலும் நியமன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு தரப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.

நியமன உறுப்பினர்கள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வேலைகளைச் நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம் என்பதும் அவர்களுக்கு கிடைக்கும் மேலும் ஒரு சலுகையாகும்.

முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.