கவர்னர் தலைமையில் நடந்த திட்டக்குழுவில் முடிவு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில், ரூ.11 ஆயிரம் கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் ஆக., முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஓராண்டிற்கு பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம்.

ஆனால், புதுச்சேரியில் பல்வேறு பிரச்னைகளால், கடந்த 10 ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் ஓரிரு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டும், அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இடைக்கால பட்ஜெட்

அதன்படி, கடந்தாண்டு நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்ததால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.அதனைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., – பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது.புதிய அரசு பொறுப்பேற்றதால், இந்த நிதி ஆண்டிற்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.மத்திய அரசு வழங்கி வரும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகை வழங்கும் காலக்கெடு, கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்ததால், மத்திய அரசு கூட்டவுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவை அறிந்த பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனையொட்டி, அரசின் அத்தியாவசிய செலவினங்களுக்காக கடந்த ஏப்ரல் முதல், வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு ரூ. 3,613 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட், வரும் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிகிறது.

திட்டக்குழு கூட்டம்

அதனையொட்டி இந்தாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி பங்கேற்றனர்.தலைமைச் செயலர் ராஜிவ்வர்மா, டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், அனைத்து துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஜி.எஸ்.டி., இழப்பீடு கிடைக்காத சூழ்நிலையில் ஏற்படும் வருவாய் இடைவெளி குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், கடந்தாண்டு பட்ஜெட்டை விட கூடுதலாக போடுவதா அல்லது குறைத்து போடுவதா என்பது குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.

latest tamil news

முதல்வர் அறிவுறுத்தல்

அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, இந்த நிதி ஆண்டில் வருவாய் இலக்கை பல துறைகளில் தற்போது எட்டியுள்ளோம். வரும் காலங்களில் அது அதிகரிக்கும். எனவே, கடந்தாண்டு பட்ஜெட் தொகையை விட கூடுதலாக, அதாவது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த பட்ஜெட் தொகையை இறுதி செய்து, நிதித்துறை மற்றும் கவர்னர் வழியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.