காளி ஆவண பட விவகாரம் | வருத்தம் தெரிவித்தது ஆகா கான் அருங்காட்சியகம்

டொரன்டோ: காளி ஆவண பட விவகாரத்தில் கனடாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

கனடாவின் டொரன்டோ நகரில் ஆகா கான் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் டொரன்டோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இன, கலாச்சார பின்னணி உடைய மாணவர்கள் தயாரித்த 18 ஆவணப்படங்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வருபவருமான லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்படமும் இடம்பெற்றது. இதையடுத்து, இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காளி படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டனர்.

இதனிடையே, இந்திய தூதரகம் கனடா அதிகாரிகளிடம் அளித்த புகாரில், “காளி படத்தின் போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்துக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே காளி படத்தை வெளியிடக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஆகா கான் அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில், “அண்டர் த டென்ட் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ள படங்கள் பட்டியலில் காளி ஆவணப்படம் இடம்பெற்றது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என புகார் வந்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். பல்வேறு மத உணர்வுகள், நம்பிக்கையை மதிக்கிறோம். இந்த ஆவணப் படம் ஒளிபரப்பப்பட மாட்டாது” என கூறப்பட்டுள்ளது. காளி படத்தின் போஸ்டர் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி வெளியானது. அதில் காளி வேடத்தில் தோன்றும் பெண் பகை பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.