சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. சென்னையில் காஸ் சிலிண்டர் ரூ.1068.50-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் ஆகிய எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயித்து அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 14.2 கிலோ எடை கொண்ட, வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.915.50 ஆக இருந்தது. அதன்பின், ஏப்ரல், மே மாதங்களில் தலா ரூ.50-ம், மே 19-ம் தேதி மேலும் ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் ரூ.1018.50 என்ற விலையில் விற்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.1068.50-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் ரூ.8.50 குறைக்கப்பட்டு, ஒரு சிலிண்டர் ரூ.2,177.50-க்கு விற்பனையாகிறது.

ஏற்கெனவே ரூ.1,450 ஆக இருந்த சமையல் காஸ் இணைப்பு பெறுவதற்கான வைப்புத்தொகை, கடந்த மாதம் ரூ.2,200 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டு சிலிண்டர்கள் பெறுவதற்கான இணைப்புத் தொகை ரூ.4,400 ஆக அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இதனிடையே, சமையல் காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது ஏழை, நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வை வாபஸ் பெற்று, விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.