`இதுவே தனியாரிடம் ஒப்படைத்திருந்தால்..’- தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிமன்றம்!

`வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய மர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
image
அந்த அறிக்கையில், `10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும். இதற்காக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மரங்களை அகற்றும் பணிக்கான நிதியை, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி எனப்படும் நபார்டு வங்கி ஆகியோரிடமிருந்து பெறப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், `வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு, ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை’ என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், `இதற்காக 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. அந்நிய மரங்களை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் பணிகள் விரைந்து முடிக்க முடியும்’ என அறிவுறுத்தினர்.
image
மேலும், `அந்நிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள தமிழக அரசே, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? இனி வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.