ஓபிஎஸ் களமான தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: பிரமாண்ட கூட்டத்தை திரட்டி ‘கெத்து’ காட்ட இபிஎஸ் திட்டம்

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாத அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது. மின்கட்டண உயர்வுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் ஓபிஎஸ்-ஐ மீறி பெரும் கூட்டத்தை திரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், சொந்த மாவட்டத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டவும் இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பழனிசாமி அணி அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பார்ப்பதற்கு திமுக அரசை கண்டித்து நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும், பெரும் கூட்டத்தை திரட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் பக்கம்தான் கட்சியும், தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே பழனிசாமி ஏற்பாடுகள் செய்திருந்தாக பேச்சு எழுந்துள்ளது.

சவாலான தேனி

தென் மாவட்டங்களில் இபிஎஸ் ஆதரவு அணியினர் ஓரளவு கூட்டத்தைத் திரட்டி வெற்றிகரமாக ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டிவிட்டனர். தென்மாவட்டங்களில் தேனி மாவட்டத்தில் மட்டும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. தேனி மாவட்டச் செயலாளராக இருந்த சையத்கான், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். அவருக்கு பதிலாக பழனிசாமி அணி இன்னும் அங்கு புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்கவில்லை. இதனால் மற்ற மாவட்டங்களை போல் ஓ.பன்னீர்செல்வத்தை மீறி தேனியில் பெரும் கூட்டத்தை கூட்டுவது இபிஎஸ் தரப்பினருக்கு பெரும் சவாலும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதனாலே தேனி மாவட்டத்தில் மட்டும் தனியாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த இபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் கூட்டத்தை திரட்டி சொந்த மாவட்டத்திலே ‘ஓபிஎஸ்’க்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

களமிறங்கும் ஆர்.பி.உதயகுமார்

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பை பழனிசாமி, சமீபத்தில் எதிர்கட்சித்துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அவரது தீவிர ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார் வசம் ஒப்படைத்துள்ளார். ஆர்.பி.உதயகுமாருக்கு ஏற்கனவே தேனி மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்திற்காக தேர்தல் பணியாற்றிய அனுபவமும், அதன்மூலம் அந்த மாவட்ட அதிமுகவினருடன் நெருக்கமான தொடர்பும் உள்ளது. அதனாலே, அந்த பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். திங்கள்கிழமை மதுரையில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அழைத்து ஆர்பி.உதயகுமார் ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கலந்து ஆலோசித்தார்.

இதுகுறித்து இபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் கூறுகையில்,‘‘தேனியில் மட்டும் 40 ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அவர்களில் 25 ஆயிரம் வந்தாலே எங்களுக்கு வெற்றிதான். தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 250 கார்களில் நிர்வாகிகளை அழைத்து செல்கிறோம். இதற்கிடையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் திரட்டுவதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், கிராமம் கிராமாக சென்று அதிமுகவினரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் நாளை ஆர்ப்பாட்டத்திற்கு வரும் அதிமுகவினரையும், அவர்கள் வாகனங்களை தடுக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், ஆர்ப்பாட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் தேனி மாவட்ட எஸ்பி முதல் டிஜிபி வரை மனு வழங்கியுள்ளோம்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.