வெண்ணிற ஆடை மூர்த்தி பிறந்தநாள் சுவாரஸ்யங்கள்: "இந்தப் பேரு எப்படி ஒட்டிக்கிச்சுன்னு எனக்கே தெரியல!"

தமிழ் சினிமாவின் அன்றைய நகைச்சுவை நடிகர்களில் தன் வித்தியாசமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் தனிக்கவனம் ஈர்த்தவர் `வெண்ணிற ஆடை’ மூர்த்தி. டபுள் மீனிங் டயலாக் பேசுவது இவருடைய ஸ்டைல். உடல்நலம் கருதி சில ஆண்டுகளாக நடிப்பதிலிருந்து ஓய்விலிருக்கும் அவருக்கு இன்று வயது 86. பிறந்தநாள் காணும் மூர்த்தியை வாழ்த்துவதோடு அவரது திரைப்பயணங்களில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்களையும் இங்கே பார்ப்போம்!

வெண்ணிற ஆடை மூர்த்தி

* ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகமாகி, இதுவரை 850 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் ‘இட்லி’.

* மூர்த்தி, சிதம்பரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர். டிஜிட்டல் யுகத்தில் யார் வேண்டுமானாலும் நடிகராகிவிடலாம். ஆனால், 1965 காலகட்டங்களில் சினிமாவின் கதவு இரும்புக்கதவு. நாடகத்தில் நடித்த அனுபவம் இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பு வேட்டையாட முடியும். அப்படி ஒரு சூழலில் வழக்கறிஞராக (பி.ஏ.பி.எல்) இருந்து நடிக்க வந்தவர். அதிலும் அமெரிக்கன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்ததை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர்.

வெண்ணிற ஆடை மூர்த்தி

* “நான் நடிக்க வந்த புதுசுல மூர்த்தின்னு எந்த நடிகரும் இல்லை. அதேபோல நிர்மலான்னும் யாருக்கும் அப்ப பெயரில்லை. சினிமாவுக்காக நான் என் பெயரை மாத்த வேண்டிய அவசியமில்லாம போனாலும், என் முதல்படம் ‘வெண்ணிற ஆடை’ என் பெயரில் எப்படி ஒட்டிக்கிச்சுன்னு இன்னிக்கு வரைக்குமே எனக்குத் தெரியல” என்பார் நகைச்சுவையாக!

* ஆரம்பக் காலத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த போது அப்போதைய குணச்சித்திர ஜாம்பவான்களான டி.கே.எஸ். பகவதி, ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா எனப் பலருடனும் நடித்திருக்கிறார் மூர்த்தி. அதேபோல அவர் நகைச்சுவை நடிகரான பிறகு ‘டணால்’ தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், டி.எஸ். பாலையா, கவுண்டமணி செந்தில், வடிவேலு, விவேக் எனப் பலருடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு. சிவாஜியுடனும் இணைந்து நடித்தவருக்கு எம்.ஜி.ஆருடன் சேர்த்து நடிக்கும் சந்தர்ப்பம் மட்டும் அமையவே இல்லை.

* மூர்த்தியின் டயலாக் டெலிவரி, மாடுலேஷன் ரொம்பவே பிரபலமானது. சாதாரண ‘தம்பி’ என்ற வார்த்தையை கூட ‘தம்ப்ப்பீஈஈ’ என புர்ர்ர்ரென தனித்துவமாகச் சொல்வார். மகேந்திரனின் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’யில் இருந்துதான் ‘தம்ப்ப்ப்பீ’யைப் பேச ஆரம்பித்து, அதனையே தனி பாணியாக மாற்ற ஆரம்பித்தார்.

* ‘சித்ராலயா’ கோபுவின் பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்த அனுபவம் இவருக்கு உண்டு. இதுவரை 200க்கும் அதிகமான டி.வி. ஸ்கிரிப்ட்கள் எழுதியிருக்கிறார். 50 படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியும் அசத்தியிருக்கிறார். ‘மாலை சூடவா’ என்ற படத்திற்குக் கதை எழுதியிருக்கிறார். மோகன் நடித்த ‘ருசி’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை இவர்தான். இயக்கம் மிகப்பெரிய பொறுப்பு என்பதால், இயக்குநர் ஆகவில்லை என்பார். ஜோதிடத்திலும் நிபுணர் இவர்.

நாகேஷுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி

* ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தாழம்பூ’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த மணிமாலாவை திருமணம் செய்தார். மூர்த்தி – மணிமாலா தம்பதியினருக்கு ஒரு மகன். அவர் அமெரிக்காவில் இருப்பதால், வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்கா டூர் அடித்துவிடுவார் மூர்த்தி.

* சன் டி.வியில் இவரது ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ அசத்தலான வரவேற்பை பெற்றது. ‘கடி ஜோக்ஸ்’, ‘இந்து மதம் சில தேன் துளிகள்’, ‘ஜோக்ஸ் டைரி’, ‘சூப்பர் மார்க்கெட்’, ‘சிரிக்க சிந்திக்க சில வரிகள்’, ‘பழமொழியும் புதுமொழியும்’, ‘நமக்கு அல்வா கொடுத்தது யாரு’, ‘சும்மாவா சொன்னாங்க’, ‘குட்லக்’ எனப் பல புத்தகங்களை எழுதியவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.