கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் உதயநிதி – வெளியான அறிவிப்பு

திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ‘தடையறத் தக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ ஆகியப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த இரண்டுப் படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியில் உள்ளன.

image

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதியப் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 54-வது படமாக இது தயாராக உள்ளது. சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில், நேற்று உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் யார் இயக்குநர் உள்பட, படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. ‘விக்ரம்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், அடுத்ததாக சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோரை வைத்து படம் தயாரிக்க உள்ளநிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளது.

image

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “15 வருட ரெட் ஜெயிண்ட்-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.