சிபிஐ அதிகாரிகளாக நடித்து மோசடி ரூ.100 கோடி தந்தால் ஆளுநர், எம்பி பதவி: 4 பேர் கைது

புதுடெல்லி: ரூ.100 கோடி கொடுத்தால் ஆளுநர், எம்பி போன்ற பதவிகளை பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற நான்கு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லாத்துாரை சேர்ந்தவர் கமலாக்கர் பிரேம்குமார் பண்ட்கர். கர்நாடகா பெலகாவியை சேர்ந்த ரவீந்திர விட்டல் நாயக், டெல்லியை சேர்ந்த மகேந்திரபால் அரோரா, அபிசேக்பூரா, முகமது அஜாஸ்கான்ஆகியோர் கமலாக்கரின் கூட்டாளிகள் ஆவர். கமலாக்கர் பண்ட்கர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு மிக பெரிய வழக்குகளை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் முடித்து கொடுப்பதாக கூறி பலரையும் ஏமாற்றி உள்ளார். தனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். ரூ.100 கோடி கொடுத்தால் ஆளுனர், எம்பி போன்ற பதவிகளை தன்னால் வாங்கி தர முடியும் என்று தனது கூட்டாளிகளிடம் பேசி உள்ளார். கமலாக்கர் பண்ட்கர்  தனது கூட்டாளி அபிசேக் பூரா மூலம் சிலரிடம் பேரம் பேசி உள்ளார். இவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதன் மூலம் சிபிஐக்கு இந்த மோசடிகள் தெரியவந்தன. இது தொடர்பாக சமீபத்தில் சிபிஐ பல இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். அவர்மீது உள்ளூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய அந்த நபரை தேடி வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.