நிதிஷ்குமார் – பாஜக கூட்டணியில் விரிசலா? அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம்

பாட்னா

பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே  கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

 

ஒரு ஆங்கில நாளேட்டில் அரசியல் ஆர்வலர்கள் சிலரின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.   அதில் காணப்படுவதாவது :

”கடந்த 2020 ஆம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது.  தேர்தலில் பாஜக 77 இடங்களில் வென்ற போதிலும், வெறும் 45 இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. தற்போது நிதிஷ் குமார் ஆர்ஜேடி தலைவர் லாலுவுடன் நெருக்கம் காட்டுவதாகத் தகவல் வெளியானது.  தவிர நிதிஷ் குமார் பாஜக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

சமீபத்தில் பீகார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில், பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.   ஆனால் இந்நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

கடந்த 17 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியைப் பறக்கவிடுவது குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.  கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்காமல் பாஜகவின் துணை முதல்வர் தர்கிஷ் பிரசாத் பங்கேற்றார்.

கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார்.  அத்துடன் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நேற்று பதவியேற்றுக் கொண்ட. விழாவில் பங்கேற்குமாறு நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளுக்கு பாஜக விடுத்த அழைப்பை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். ஆகவே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது”

எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.