“மக்களின் கண்களும் செவிகளும் பத்திரிகையாளர்களே” – தலைமை நீதிபதி என்வி ரமணா

புதுடெல்லி: “ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன” என்று இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா பேசியுள்ளார்.

டெல்லியில், ராஜஸ்தான் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ குலாப் சந்த் கோத்தாரி எழுதிய “கீதா விஜ்ஞான உபநிஷத்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஊடகங்கள் குறித்து பேசினார். “ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன. பத்திரிகையாளர்களே மக்களின் கண்களாக, காதுகளாக அறியப்படுகிறார்கள். இந்தியாவில் நிலவும் சமூக சூழ்நிலையில் உண்மைகளை முன்வைப்பது என்பது ஓவ்வொரு ஊடக நிறுவனங்களின் கடமையாகும்.

பத்திரிகைகளில் அச்சிடப்படுவதெல்லாம் உண்மை என்று மக்கள் இன்னும் நம்புகிறார்கள். எனவே, ஊடகங்கள் தனது செல்வாக்கை வணிக நோக்குடன், அவற்றின் நலன்களை விரிவுபடுத்தும் கருவியாக பயன்படுத்தாமல், நேர்மையான நோக்குடன் செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியாவின் இருண்ட தினங்களாக அமைந்த எமெர்ஜென்சி நிலையின்போது வணிக நோக்குடன் செயல்படாத ஊடகங்களால் மட்டுமே, அவற்றை எதிர்த்து போராட முடிந்தது. ஊடக நிறுவனங்களின் உண்மைத் தன்மை அவ்வப்போது மதிப்பிடப்பட வேண்டும். சோதனைக் காலங்களில் அவற்றின் நடத்தையில் மாற்றங்கள் கொண்டுவர தகுந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சில தினங்கள் முன்பு இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி ரமணா, “ஊடகங்களில் வெளியாகும் சார்புடைய செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. இதனால் நீதியை நிலைநிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது. நாட்டில் அச்சு ஊடங்களாவது ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன.

காட்சி ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் எல்லைமீறிச் செல்வதாலும், பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னால் இழுத்துச் சென்றுவிடுகிறது.” என்று விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.