தெறிக்க விடலாமா.. ரைபிள் கிளப்பை குலுங்க வைத்த ரசிகர்கள்.. இறங்கி வந்த அஜீத்..!

துப்பாக்கிசுடும் போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ள அஜித்தை காண்பதற்கு திரண்ட கூட்டத்தை கலைக்க இயலாமல் போலீசார் விழிபிதுங்கி போயினர். திருச்சியை திரும்பிப்பார்க்க வைத்த அசராத அஜீத் ரசிகர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

நடிகர் அஜீத் திருச்சி துப்பாக்கி சுடும் மையத்திற்கு போட்டியில் பங்கேற்பதற்காக வந்தார். காரில் இருந்து இறங்கியதும் அஜீத் வேகமாக ரைபிள் கிளப்பிற்குள் சென்று விட ரசிகர்கள் முண்டியடிக்க போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்த இயலாமல் தவித்து போயினர்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது, பள்ளிக் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் ஏராளமான இளைஞர்கள் அஜீத்தை காண துப்பாக்கி சுடும் மையத்திற்கு வெளியே குவிந்த வண்ணம் இருந்தனர்.

இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக மாடியில் நின்று அஜீத் கை அசைத்து கையெடுத்து கும்பிட்டார், அஜீத்தை பார்த்த உற்சாகத்தில் சில ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கூச்சலிட்டு ஆட்டம் போட்டனர்.

முண்டியடித்துக் கொண்டு ரைபிள் கிளப்புக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் கையால் அடித்து விரட்டினர். ஆனாலும் அசராத ரசிகர்கள் அங்கிருந்து செல்லவில்லை, ரசிகர் ஒருவர் 22 வருடங்களுக்கு முன் அஜீத்தை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிய ஆல்பத்துடன் வந்திருந்தார்.

இருள் சூழ்ந்த நிலையிலும் ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி போன போலீசார், ரசிகர்களிடம் கலைந்து போகசொல்லி பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பதிலுக்கு தாங்கள் நேருக்கு நேராக அஜித்தை பார்த்தால் மட்டும் போதும், சந்தோசமாக சென்று விடுவோம் என்று ஒரே குரலாக ஓங்கி ஒலித்தனர்.

இதையடுத்து தனது ரசிகர்களை காண்பதற்கு கீழே இறங்கி வந்த அஜீத் , சிறிது நேரம் கையை கட்டிக் கொண்டு அவர்கள் முன்னால் நின்றார். பின்னர் அனைத்து ரசிகர்களையும் நோக்கி கை அசைத்தும், வணங்கியும் , முத்தங்களை பறக்கவிட்டும் அங்கிருந்து உள்ளே சென்றார்.

ரசிகர்கள் தான் இப்படி என்றால் சாதாரண உடையில் இருந்த போலீசாரும் அஜீத்துடன் செல்பி எடுக்க முண்டியத்தனர். ஒரு சிறுமியை அஜீத் தூக்கி கையில் வைத்துக் கொள்ள, பச்சிளம் குழந்தையுடன் வந்த தாய் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டார்

இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பல ஆண்டுகளாக ஏராளமான பதங்கங்களை வென்ற முன்னாள் காவல் அதிகாரியான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி தேவாரம் அங்கு வந்த போது அவரை அழைத்துச் சென்ற போலீசாரை தவிர ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.