அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்  

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் இதில் கலந்துகொண்டார். 

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்;

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக சகல அமைச்சுகளினதும் வரவுசெலவுகள் கடந்த சில தினங்களில் ஆராயப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர்,எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைக் குழுவொன்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படும்.

இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு கியு.ஆர்.குறியீட்டு முறைப்பிரகாரம் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

குறியீட்டு முறைமை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. 40 லட்சம் பேர் இதில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருளை விநியோகிக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸகள், பாடசாலை வான், அம்புலன்ஸ் வண்டிகள், விவசாய உபகரணங்கள் உட்பட தொழில் பேட்டைகளுக்கு எரிபொருள் நிலையங்களுக்குப் புறம்பாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய 107 டிப்போக்கள் ஊடாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

விவசாய உரத்திற்கான தட்டுப்பாடுக்கு ஒருவாரத்தில் தீர்வு:

இதேவேளை, விவசாய உரத்திற்கான தட்டுப்பாடு ஒருவார காலப்பகுதியில் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று விவசாய அமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்தாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.

நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்

ரயில்வே திணைக்களம் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,ரயில்வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக பதிவாகியுள்ளதாக சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க 2.3 பில்லியன்களும் செலவிடப்பட்டது.

2012 இல் வருமானம் 4.8 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 34 பில்லியன்களாக இருந்தது. 2021 இல் வருமானம் 2.7 பில்லியன்களாவும் நஷ்டம் 47 பில்லியன்களாகவும் பதிவாகியுள்ளது. 2022 இல் வருமானம் குறைந்தது. வருமானம் 2.6 பில்லியன்களாகும். நஷ்டம் பில்லியன் 37 களாகும். 4000 கோடி ரூபா வருடாந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சிக்கல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

எரிபொருள் கடனாக பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.10 கோடி ரூபாவுக்கு மேல் நாளாந்த நஷ்டம் உள்ளது. சம்பளத்துக்கு மாத்திரம் 7.8 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவாக 2021இல் 2.3 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே திணைக்களத்தை எவ்வாறு நடத்த முடியும்?

121 ரூபாவாக இருந்த எரிபொருள் விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதால் ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. பஸ் கட்டணத்தை விட 50 வீதம் குறைவாக ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதிகரித்த கட்டணத்தை அறவிட ரயில் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென ரயில்வே திணைக்கள உத்தியோகஸ்தர்களிடம் கோரியுள்ளோம்.ரயில்வே திணைக்கள செலவுகளை குறைப்பது தொடர்பாக அவர்களுடன் பேசமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.