கோடநாடு வழக்கு | ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடாநாடு கொலை , கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்த நிலையில், கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கோடநாடு கொலை கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடைய சாட்சியங்களைக் கலைத்து, ஆதாரங்களை அழித்ததாக கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஜாமீன் வழங்கிய நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், இருவரும் ஊட்டியிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஊட்டியில் தங்கியிருப்பதாகல் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “மனுதாரர்கள் இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனைகளை மாற்றி, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15-ம் தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.