நல்லூர் மஹோற்சவம் ,இம்முறை வழமைபோன்று – யாழ் மாநகர முதல்வர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் ,இம்முறை வழமைபோன்று இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்துவிடப்படும்.

ஆலயவெளி வீதியை சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ண கொடிகளால் எல்லையிடப்படும். வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எந்த காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

வெள்ளை வர்ணக்கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்த விதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவு செய்தல் மற்றும் காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஆலயத்தில் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்கு வருகின்ற தூக்குகாவடி எடுக்கும் பக்தர்கள் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.

அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால்  யாழ் நகரை அடைய முடியும்.

இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதி ஊடாகவே இடம்பெறும்

இதேவேளை முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.

கொவிட் எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டியது தமது பொறுப்பாகும்.

திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ்.மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ் மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.