இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி… ஜொலி ஜொலிக்கும் சென்னை… வீடியோ….

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை  6மணி அளவில் சென்னையில் உள்ள  நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் என, உலக நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிங்கள், சென்னை மாநகராட்சி கட்டிடம், கடற்கரையில் உள்ள போர் நினைவுச் சின்னம் உள்பட  பல்வேறு நினைவுச்சின்னங்கள்,  மெரினா பீச், கருணாநிதி நினைவிடம், நேரு ஸ்டேடியம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காண்போரை கவரும் வண்ணம் ஜொலிஜொலிக்கிறது. வண்ணமயமாக நீரூற்றுகள் தண்ணீரை பீய்ச்சி பார்ப்போரை கவர்கின்றன. மெரினா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலம் ஏற்கனவே செஸ் கட்டங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது வண்ண விளக்குகளால் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின்  உடனடியாக 100 கோடி ரூபாயை ஒதுக்கியதுடன், விழா ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டார். இடையில் இருந்த இந்த  3 மாதங்களில் தமிழக அரசு  போட்டிக்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. தொடக்க விழாவுக்கு பிரதமர், போட்டிக்கு வெளிநாட்டினர்  வருவதால்  சென்னை விமான நிலையம்,  தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம், போட்டி நடைபெறும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

இன்று மாலை செஸ் போட்டி தொடக்கவிழா நடைபெறும் அரங்கின் சாலைகளில் இன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. போட்டியில்  , உக்ரைன், ஜெர்மனி, அமெரிக்கா, சவுதி அரேபியா, இஸ்ரேல், வெனிசுலா, ஜமைக்கா, மலேசியா, பாகிஸ்தான், ஓமன், உஸ்பெகிஸ்தான், டென்மார்க் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. வீரர்,வீராங்கனைகள் 1,736 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த  உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 44வது தொடர்,  ரஷ்யா உக்ரைன் உடனான போர் காரணமாக அங்கு நடைபெற வில்லை. அதனால், அந்த வாய்ப்பை இந்தியாவுக்கு கிடைத்தது. அதை தமிழகஅரசு பெற்று வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.