30 மாணவர்களுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி: ம.பி. மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவு

சாகர்: 30 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஊசியைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் ஜிதேந்திரா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் தடுப்பூசி செலுத்தும் போது ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவர் அங்கு நடந்த நிகழ்வை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் மருத்துவர் ஜிதேந்திரா 30 மாணவர்களுக்கு ஒரே ஊசியில் தடுப்பூசி செலுத்துவது பதிவாகியுள்ளது.

1990களில் இந்தியாவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஊசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. எச்ஐவி பரவலைத் தடுக்கும் வகையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஊசி புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கேள்வி எழுப்பப்பட, “ஒரு நபருக்கு பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் எனக்கு இந்தப் பணியை ஒதுக்கிய மேலதிகாரிகளிடம் நான் எல்லா மாணவர்களுக்கும் இந்த ஒரு ஊசியைத் தான் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பினேன். அவர்கள் ஆம் என்றார்கள். நான் அதன்படியே செய்தேன். இது எப்படி எனது தவறாகும்” என்று வினவிய வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

— Anurag Dwary (@Anurag_Dwary) July 27, 2022

சாகர் மாவட்ட நிர்வாகத்தி சார்பில், இது தொடர்பாக மருத்துவர் ஜிதேந்திராவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்ட தடுப்பூசி திட்ட அலுவலர் மருத்துவர் ராகேஷ் ரோஷன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், சாகர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சித்திஜ் சிங்கால், மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி உடனடியாக ஆய்வு மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதிகாரி ஆய்வுக்குச் சென்றபோது ஜிதேந்திரா அங்கு இல்லை. அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.