கடத்தப்பட்டதாக பொய் கூறிய குற்றச்சாட்டின் பேரில் விமானப்படை அதிகாரி கைது

இனந்தெரியாத குழுவொன்றால் தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அக்குழுவினர் தன்னை கொலை செய்ய முற்பட்டதாகவும்  பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக விமானப்படை அதிகாரி ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றியவர் எனவும் அவர் வாழைச்சேனை, ரிதியத்தன்னவில் நேற்று காலை (28) மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட போது பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து  விமானப்படை அதிகாரியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர். 

அவரை கடத்தி வைத்திருந்ததாக சொல்லப்படும் இடத்தில், “கொடூரமான அரசியல்வாதிகளுக்கு உதவி செய்பவர்கள் இவ்வாறு கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழில் எழுதப்பட்டிருந்த பலகையினையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர், தன்னை இனந்தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விசாரணைகளின் போது எழுந்த சந்தேகம் காரணமாக குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் சந்தேகநபர் தானே இந்த செயலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் நிகழ் நிலை வீடியோ கேமிங்கிற்கு (online game) பெரிதும் அடிமையாகி இருப்பதும், வீடியோ கேம்களில் செலவழிப்பதற்காக முகாமில் உள்ள மற்ற விமானப் படை வீரர்களிடம் பெரும் தொகை பண‌த்தை பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்கொலை செய்துகொண்டால், தனது மனைவிக்கு விமானப் படையில் இருந்து எந்தக் கொடுப்பனவும் கிடைக்காது என்ற காரணத்தினால் அவர் இந்தத் தவறான
திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .

இந்த சம்பவத்தால் விமானப்படையின் நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை கருத்தில் கொண்டு விமானப்படை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணையின் முடிவில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.