21 வயது பெண் தன் பாலின உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரை ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு

தன் பாலின உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தால் கடத்தப்பட்ட பெண் 21 வயது பூர்த்தியடைந்தவர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ஆணாக மாறிய பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த ஜூலை 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜூலை 16ம் தேதி நாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கியதோடு அந்த பெண்ணை பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தன்பாலின உறவை ஏற்காமல், அதனை மாற்றுவதாகக் கூறி அப்பெண்ணிற்கு சிகிச்சை வழங்குவதாக கூறி (shock treatment) அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதோடு, அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார்.
இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அந்த பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே, அவரது விருப்பப்படி செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.