அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை என்றும், தற்போது  நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்று திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்தவர், திருவாரூர் மாவட்டத்தில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிசை வீட்டில் வசிப்பதாகவும், அவர்களுக்குக் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் கீழ் விரைவில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 48 ஆயிரம் பேருக்கு எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளதாகவும், அவர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தஆண்டு, முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்கூட்டியே குறுவை அதிகப் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறியவர்,  நெல்லின் ஆதார விலையை மத்திய அரசு குண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி உள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது எனத் தெரிவித்த அவர், இம்முறை நெல் கொள்முதல் நிலையங்கள் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் திறக்கப்படுவதால், ஆதார விலையைச் செப்டம்பர் முதல் தேதி முதலே வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்ட நெல்லின் ஆதார விலை வழங்கப்படும் என மத்திய அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி நெல் கிடங்குகள் அதிகளவில் உள்ளது. எனவே, கொள்முதல் செய்யப்படும் நெல்லை நேரடியாக அரவை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுவை நெல்லை கொள்முதல் செய்யும் போது தேவையான தார்ப்பாய், சாக்கு உள்ளிட்ட பொருள்களைக் கூடுதலாக வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர், கொள்முதல் நிலையங்களில் இதுவரை ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், விவசாயிகளுக்காக வும், பொதுமக்களுக்காகவும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். எனவே அரசு நேரடி கொள் முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை எனக் கூறிய அவர், கொள் முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொகுப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் எனக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. பழைய நடைமுறை தொடரும் எனத் தெரிவித்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் புகார்களைத் தடுப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே 24மணி நேர டோல்ஃபிரி  எண்கள் கொடுக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்த எண்மூலம், விவசாயிகள், பொதுமக்கள், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என அனைவரும் புகார் கொடுக்கலாம். புகார்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதில் பெறப்படும் புகார்கள் மீது வாரம்தோறும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.