நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், நாட்டின் 67 வலயங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய மழை காலத்துடன் இந்த அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டட நிர்மாணப் பகுதிகள், என்பனவற்றை உடனடியாகச் சுத்தப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறக் கூடும் என்று அவர் சுட்டிக்கட்டினார்.