கருமுட்டை விவகாரம்; மருத்துவமனைக்கு மீண்டும் சீல்; ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்: புறநோயாளிகள் அவதி

ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு மீண்டும் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகளில் 800 மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் சுதா மருத்துவமனை, பெருந்துறை பிரசாத் மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதையடுத்து சுதா மருத்துவமனை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து, தனி நீதிபதி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்ததை அகற்ற உத்தரவிட்டார். இதன்பேரில், கடந்த சில நாட்களாக சுதா மருத்துவமனை மீண்டும் வழக்கம்போல் செயல்பட்டு வந்தது. இதைத்தொடா்ந்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் நேற்று தமிழக அரசு சீல் வைத்தது செல்லும் என்றும், மீண்டும் மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதன்பேரில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு மருத்துவமனைக்கு சீல் வைக்க வந்தனர். சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்து, மருத்துவமனையில் ஊழியர்கள், டாக்டர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில,் இன்று(6ம் தேதி) இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறியதாவது: ஈரோடு சுதா மருத்துவமனை 40 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதில், ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருமுட்டை விவகாரத்தில் நடந்த விதிமீறல் தொடர்பாக தமிழக அரசு மருத்துவமனைக்கு சீல் வைத்தது. சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, மருத்துவமனைக்கு சீலினை அகற்ற உத்தரவிட்டது. அந்த உத்தரவினை அமல்படுத்த 5 நாட்களுக்கு மேல் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர். ஆனால், தற்போது மீண்டும் சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவிட்ட உடன், 2 மணி நேரத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என கூறினர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை குறிப்பிட்ட கால அவகாசம் வழங்காமல் எப்படி அப்புறப்படுத்த முடியும். நாங்கள் தமிழக அரசு உத்தரவுக்கும், ஐகோர்ட் உத்தரவுக்கும் முழு ஒத்துழைப்பு தருகிறோம். இந்த மருத்துவமனை பல துறை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கே சீல் வைப்பது ஏற்புடையதல்ல. ஐகோர்ட்டின் தீர்ப்பின் நகல் கையில் கிடைக்காத நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கே சீல் வைப்பது தவறான நடவடிக்கையாகும். இதனை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள், 800 மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை புறக்கணித்துள்ளோம். அடுத்த கட்டமாக மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சி.என்.ராஜா கூறினார்.புறநோயாளிகள் அவதி: ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு உள் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாலும், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாலும் புற நோயாளிகள் சிகிச்சை பெற அவதிக்குள்ளாகினர். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பெற அலைமோதினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.