திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு தொடங்கியது: நல்லகண்ணு கொடியேற்றி வைத்தார்

திருப்பூர்: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு, இன்று தொடங்கியது. மூத்த தலைவர் நல்லகண்ணு, கட்சி கொடி ஏற்றினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாடு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யாகார்த்திக் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு, வருகிற 9ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாநாட்டு அரங்கில் கட்சி கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், தேசிய கவுன்சிலர் உறுப்பினர் ஆனி ராஜா ஆகியோர் ஏற்றிவைத்து, மாநாட்டை தொடங்கி வைத்தனர்.மன்னார்குடியில் இருந்து எடுத்து வரப்பட்ட செங்கொடி வரவேற்புடன் மாநாடு தொடங்கியது. கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தியாகச் சுடர்களை மூத்த தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தியாகச்சுடரை மூத்த தலைவர் காளியப்பன் ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் கட்சியின் அரசியல் அறிக்கை, கட்சியின் அமைப்பு நிலை அறிக்கை, கடந்த நான்கரை ஆண்டுகளாக கட்சி ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கை முன் வைக்கப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடந்தது.மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரை மதர்சார்பின்மை கொள்கையை வலியறுத்தி, மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மா.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. (எம்.எல்) மாநில செயலாளர் நடராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பேச உள்ளனர்.7ம் தேதி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மிகவும் மோசமான மக்கள் விரோத கொள்கைகள், அதன் காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி, விலைவாசி, வேலையின்மை பிரச்னை, திருப்பூரில் நூல்விலை உயர்வு, கோவை பஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, விவசாய பிரச்னைகள், மொழி திணிப்பு, மொழிகளின் வளர்ச்சிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியில் ஏற்றத்தாழ்வு, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதியில் பாரபட்சம் காட்டுவது, தமிழக மீனவர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.மாநாட்டு நிறைவுநாளில் தேசியக்கொடி ஏற்றப்படும். மாலை 3 மணிக்கு மிக பிரமாண்டமான பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சீருடை அணிந்த 10 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். கட்சியின் 45 மாவட்ட அமைப்புகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு, திருப்பூர் பத்மினி கார்டனில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.