பல்லாவரம் வேல்ஸ் பல்கலை. 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

பல்லாவரம்: பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், அறிவியல் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினரான கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த கல்வியாண்டில் 68 தங்கப் பதக்கங்களும், 48 வெள்ளி பதக்கங்களும், 43 வெண்கல பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் 4011 இளநிலை பட்டங்களும், 583 முதுநிலை பட்டங்களும், 87 ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும், 148 முனைவர் பட்டங்களும் என 4,829 பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குனர் சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ரேடிசன் புளூ குழும தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், இவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். வரும்  2047ல் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும். அப்போது உங்களை போன்ற மாணவர்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். உங்களது லட்சிய கனவுகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு காலத்தில் உணவு பற்றாக்குறை என்பது மிக அதிகமாக இருந்தது. தற்போது அதை நாம் கடந்து விட்டோம். இருப்பினும், பசி மற்றும் நோய்களால் வாடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களையும் முன்னேற்ற வேண்டும். நாடு 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுவோம் என்னும் நிகழ்வை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். நீங்கள் யார் என்பதில் நாடு பெருமை கொள்ளவேண்டும். நாட்டின் சேவை உங்களிடமிருந்து தான் முதலில் துவங்குகிறது. தனிமனித சாதனைகள் அனைத்தும் சேர்ந்து நம் நாட்டை உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும்” என்றார். ஏற்பாடுகளை இணைவேந்தர்கள் ஆர்த்தி கணேஷ், ஜோதி முருகன், துணைவேந்தர் மன் நாராயணன், துணை தலைவர் பிரித்தா கணேஷ், பதிவாளர் சரவணன், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.