குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி: 11ம் தேதி பதவி ஏற்பு விழா

டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிகிறது. அதனால் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக மேற்குவங்க  மாநில முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71) போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின்  முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வா (80) போட்டியிடுகிறார். இருவருக்கும்  இடையே நேரடி போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக  மார்கரெட் ஆல்வா போட்டியிட்டாலும், மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இக்கட்சியின் அறிவிப்பு எதிர்கட்சிகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து பாஜக  கூட்டணிக்கு பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு உள்ளது. அத்துடன் பாஜக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம் போன்ற கட்சிகளும்,  ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைடைந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகளை, மக்களவை பொதுச்செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்தார். இதையடுத்து துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர்  11ம் தேதி பதவியேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.