திருச்சி: காவிரியில் பாய்ந்தோடும் வெள்ளம்.. 171 ஏரிகளில் ஒன்று கூட முழுமையாக நிரம்பவில்லை!

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதும் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் வானம்பார்த்த பூமியாக இருப்பது விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. குடியிப்புகள், விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீர்.. இப்படி காவிரி ஆற்றில் கண்முன்னே வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் பாசனத்துக்கு பயன்படாத ஏக்கத்தில் இருக்கின்றனர் திருச்சி விவசாயிகள். திருச்சியில் காவிரி ஆற்றின் கிளைகளாக புதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்களும் பிரதானமாக உள்ளன.
இதன்மூலம் 171 ஏரிகள் நிரம்பிவந்தன. தற்போது காவிரியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் பாய்தோடியபோதும், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை என்பது விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 111 ஏரிகளில் சுமார் 40 விழுக்காடு அளவில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 61 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுச்செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. இந்தாண்டு மே மாதம் முதலே காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், திருச்சி மாவட்டத்தில் ஏரிகளுக்கு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பாய்ந்தோடாதது ஏன் என விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

திருச்சி அதவத்தூர் பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கேயும், நவலூரில் புதிய கட்டளை வாய்க்கால் குறுக்கேயும் பாலம் அமைக்கும் பணியால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. பல இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டும் கரைகள் பலம் இல்லாமலும் இருப்பதால் தண்ணீரை நிரம்பிவைக்க முடியாத சூழல் நிலவுகிறது. முக்கியமாக நீர்வரத்து பாதைகளான வாய்க்கால்களை முறையாக தூர்வாரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர். தஞ்சாவூர், திருவாரூரில் காவிரி வாய்க்கால் பாசன ஏரிகள் கிட்டதட்ட முழுவதுமாக நிரம்பிவிட்டன. திருச்சி மாவட்டத்திலும் ஏரிகளுக்கு நீர் செல்வதை விரைவாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.