பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டம் – டெல்லியில் தடையை மீறிய ராகுல், பிரியங்கா கைது

புதுடெல்லி: பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் கருப்பு உடையுடன் போராட்டம் நடத்திய ராகுல், பிரியங்கா காந்தி மற்றும் சசிதரூர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது, பணவீக்கம், விலைவாசி உயர்வு என பல காரணங்களை கூறி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கருப்பு உடையில் நேற்று பேரணி சென்றனர்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி செல்ல முயன்ற சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை, விஜய் சவுக் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு அருகே பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். தடுப்புகளை தாண்டி குதித்து பேரணி செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

அப்போது பிரியங்கா அளித்த பேட்டியில், ‘‘பணவீக்கம் எல்லை தாண்டி சென்றுவிட்டது. இதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும். அதனால்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார்.

இதேபோல், பிஹார் தலைநகர் பாட்னா, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மோடி… ஹிட்லர்

காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:

நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டது. பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் தேசிய ஆளவிலான போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஹிட்லர் கூடத்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது எனப் புரியல்லை. சுமார் நூறு ஆண்டுகளாக இந்தியா படிப்படியாக உருவாக்கியது எல்லாம், உங்கள் கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.